Aran Sei

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: ‘இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லும்’ – ப.சிதம்பரம் கேள்வி

ன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில், ஒதுக்கீடு என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக கேள்வி முன் வைக்கப்பட்டது.

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தற்காலிகமான ஏற்பாடு – ஒபிஎஸ்: கடும் கண்டனம் தெரிவித்த ராமதாஸ்: அதிமுக கூட்டணியில் குழப்பமா?

அதற்குப் பதிலளித்த ஒ.பன்னீர்செல்வம், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்தச் சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வழங்கப்படும் இடஒதுக்கீடுதான் நிரந்தரமானது. இது (10.5 விழுக்காடு இடஒதுக்கீடு) ஒரு தற்காலிமான ஏற்பாடே ஆகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தான், இறுதியான,நிரந்தரமான உத்தரவு வெளியிடப்படும். சாதி எண்ணிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் சதவீதம் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து, இன்று (மார்ச் 31) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “10.5 விழுக்காடுஉள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்கள் குறித்த கவலை. இல்லையில்லை, 10.5 விழுக்காடு நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்