ஆக்சிஜன் பற்றாக்குறையில் உயிரிழந்தவர்கள், கொரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரிழப்பு, தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குறித்த கணக்கு ஒன்றிய அரசிடம் இல்லை. அப்படி இருக்கையில், 137 கோடி மக்களின் குடியுரிமையை எவ்வாறு சரிபார்க்கும் என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவரும் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஓவைசி, “வழக்கம் போலவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சில் முழுப் பொய்களும், அரை உண்மைகளும் இடம் பெற்றிருந்தன. மக்கள்தொகை கொள்கை தேவை என்று கோரியிருந்தார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை அதிகரித்துவிட்டதாகவும் பொய் சொல்லியிருந்தார். ஆனால், உண்மையில் இஸ்லாமிய மக்களின் வளர்ச்சி வீதம் வேகமாகக் குறைந்துள்ளது. இதில் மக்கள்தொகை சமநிலையற்ற தன்மை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
1. As usual, RSS Mohan’s speech today was full of lies & half-truths. He called for a population policy & repeated the lie that Muslim & Christian population has increased. Muslim population growth rate has had the sharpest decline among all. There’s no ‘demographic imbalance’1/n
— Asaduddin Owaisi (@asadowaisi) October 15, 2021
“சமூகக் கொடுமைகளாக உள்ள குழந்தைத் திருமணங்கள், பெண் குழந்தைகளை கருவிலேயே கலைப்பது போன்றவைதான் கவலைப்பட வேண்டியவையாக உள்ளன. நடைபெற்றுள்ள குழந்தைத் திருமணங்களில் 84 சதவீதம் இந்துக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2001-2011ஆம் ஆண்டுக்கு இடையே இஸ்லாமிய சமூகத்தில் ஆண்-பெண் இடையிலான விகிதம் என்பது ஆயிரம் ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற அளவிலிருந்து 951 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இந்து சமூகத்தில் 931 முதல் 939 வரை அதிகரித்துள்ளது” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மோகன் பகவத் இந்தியாவில் அதிகரித்துவரும் வயதானவர்கள் குறித்து கவலைப்படுகிறார். இளம் தலைமுறையினர் வயதானவர்களுக்கு உதவுவது அவசியம். மோகன் பகவத் அவரின் மாணவரான பிரதமர் மோடிக்கு இதுகுறித்துக் கூற வேண்டும். பிரதமர் மோடியைப் போல் மக்கள்தொகை விகிதத்தை யாரும் அழித்தது இல்லை. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். கல்வியறிவு போதாமல், அரசின் ஆதரவு இல்லாமல், வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்” என்று அசாதுதீன் ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.
ஓவைசி வீட்டைத் தாக்கிய இந்து சேனா அமைப்பினர் – நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பில்லையா?
“பக்கோடா கடை நடத்துங்கள் என்று ஒரு நாட்டின் பிரதமர் அளித்த வாக்குறுதியை வைத்துக்கொண்டு, ஒரு நாடு என்ன செய்ய முடியும்? மக்கள்தொகை கொள்கை கொண்டுவந்தால், பணி செய்யும் பிரிவில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இருப்பார்கள். வயதானோருக்கு யார் ஆதரவு அளிப்பது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தாலிபான்களைத் தீவிரவாதிகள் என்று மோகன் பகவத் அழைத்தார். இது பிரதமர் மோடி மீதான நேரடித் தாக்குதலாகவே கருத முடியும். மோடி அரசுதான் தாலிபான் பிரதிநிதிகளைத் தூதரகத்தில் அழைத்துப் பேசியது. தீவிரவாதிகளாக இருந்தால், தாலிபான்களை யுஏபிஏ தடைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வருமா?” என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
370 சிறப்புச் சட்டத்தை ரத்து செய்தபின் ஜம்மு காஷ்மீர் மக்கள் பயன்பெறுகிறார்கள் என்று மோகன் பகவத் பேசியுள்ளார். அண்மையில், 29 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இணைய சேவை தடை செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் அதிகபட்சமான வேலையின்மை சதவீதமான 21.6 விழுக்காடு ஜம்மு காஷ்மீரில்தான் இருக்கிறது என்பது தெரியுமா? என்ஆர்சியை மீண்டும் கொண்டுவர மோகன் பகவத் வலியுறுத்துகிறார். என்ஆர்சி என்பது ஒன்றுமில்லை. ஆனால், சந்தேகப்படும் மக்களைத் துன்புறுத்தக்கூடிய ஓர் ஆயுதம். ஆக்சிஜன் பற்றாக்குறையில் உயிரிழந்தவர்கள், கொரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள் தற்கொலை என உயிரிழந்தவர்கள் குறித்த கணக்கு ஒன்றிய அரசிடம் இல்லை. ஆனால், 1.37 கோடி மக்களின் குடியுரிமையை எவ்வாறு சரிபார்க்கும்?” என்று தனது டிவிட்டர் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.