Aran Sei

கொரோனா எதிரொலி: புதிய சட்டமன்றம் கட்டும் பணி உடனடியாக நிறுத்தம் – சத்தீஸ்கர் அரசு உத்தரவு

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிய சட்டமன்ற வளாகம் கட்டுவதற்கான டெண்டர் மற்றும் மாநிலத்தில் நடைபெற்று வரும் பிற கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சத்தீஸ்கர் அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ”புதிய ஆளுநர் மாளிகை, புதிய முதலமைச்சர் குடியிருப்பு, புதிய சட்டமன்ற கட்டடம், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், புதிய ராய்பூர்  பகுதியில் சர்க்யூட் இல்லம் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் உடனடியாக நிறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நவம்பர் 25, 2019 ஆம் தேதி நடைபெற்றது.

கட்டுமான பணிகள் நிறுத்தம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், “குடிமக்களுக்கே முன்னுரிமை. புதிய சட்டசபை கட்டிடம், ஆளுநர் மாளிகை, முதலமைச்சரின் குடியிருப்பு, அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் கொரோனாவிற்கு முன்பு துவங்கப்பட்டது. இன்றைக்கு இந்தப் பெருந்தொற்று சமயத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டைப் போலவே, 2021-22 நிதியாண்டிலும், சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அனைத்து அமைச்சகங்களையும் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசை எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், சத்தீஸ்கரில் புதிய கட்டுமான பணிகளை தொடரக்கூடாது என்று, அம்மாநில பாஜகவினர் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்