Aran Sei

‘நீக்கப்பட்ட படைப்புக்ளை மீண்டும் சேர்க்க வேண்டும்’ – டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அருந்ததி ராய், பெருமாள் முருகன் உள்ளிட்ட 1,150 செயற்பாட்டாளர்கள் கடிதம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட  பாமா, சுகிர்தராணி, மகாஸ்வேதா தேவி ஆகியோரின் படைப்புகள் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டுமென கோரி ஏறத்தாழ 1,150  பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 24 அன்று எழுத்தாளர்  மகாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’ சிறுகதை, கவிஞர் சுகிர்தராணியின் இரண்டு கவிதைகள், எழுத்தாளர் பாமாவின் ‘சங்கதி’  ஆகிய படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகத்தின்  இளங்கலை ஆங்கில படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து பல்கலைக்கழக நிர்வாகத்தால்  நீக்கப்பட்டது.

அந்தக் கடிதத்தில், “பாடத்திட்டத்திலிருந்து  நீக்கப்பட்ட படைப்புகள் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குதலைக் குறிப்பாக பாலின ரீதியாகவும் உணர்வதற்கு உதவக்கூடியவை என்றும் கூறியுள்ளனர்.

மேலும், அந்தக் கடிதத்தில்  மகாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’ சிறுகதை, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ ஒடுக்குமுறை காலனித்துவ மற்றும் காலனித்துவ இந்தியாவின் அமைப்புகளுக்கு எதிரான பழங்குடியினரின் போராட்டத்தை உயிரோட்டமாக விளக்குவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, தலித் பெண் எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணியின் படைப்புகளும் பல விருதுகளை வென்றுள்ளது என்றும், இந்தியாவில்   சாதி- பாலின ரீதியிலான ஒடுக்குமுறையையும் பரிமாணத்தையும் புரிந்து கொள்வதற்கு இருவரது எழுத்துகளும் உதவுகின்றன என்றும் அந்தக் கடிதத்தில்  கூறியுள்ளனர்.

எனவே பல்கலைகழக நிர்வாகம் இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென  சமூக செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் என 1,150  பேர் இந்தக்கடிதத்தை எழுதியுள்ளனர்.

குறிப்பாக  எழுத்தாளர் அருந்ததி ராய், வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர், திரைக்கலைஞர் நந்திதா தாஸ்,    பேராசிரியர் அ.மங்கை, எழுத்தாளர். பெருமாள் முருகன், சென்னைப் பல்கலைக்கழக  பேராசிரியர் ஆர். அழகரசன், வ.கீதா ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்