Aran Sei

கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

Image Credit : scroll.in

கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிப்பதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென, இந்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முரணாக செயல்பட்டு வருவதாக பொது சுகாதாரம் சார் வழக்கறிஞர்களும், அறிவுசார் சொத்துரிமை வல்லுனர்களும் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிக்க சட்டரீதியான விலக்களிப்பது தடுப்பூசி உற்பத்திக்கு எதிராக இருக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிக்கக் கூடாது – போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

உலகளவில் தடுப்பு மருந்தை எளிதில் பயன்படுத்தும் வகையில் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமையில் இருந்து, தற்காலிகமாக விலக்களிக்கும் வகையில் ‘வணிகம் சார் அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தில்’ (TRIPS) குறிப்பிட்ட சில விதிகளில் இடமளிக்க வேண்டுமென இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த,அக்டோபர் 2020 அன்று, உலக வர்த்தக நிறுவனத்தின் டீ.ஆர்.ஐ.பி. எஸ் குழுவிடம் “அறிவுசார் சொத்துரிமையினால் குறித்த நேரத்தில் மருந்துப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாக  எண்ணற்ற அறிக்கைகள் கூறுகின்றன” என்று இவ்விரு நாடுகளும் தெரிவித்திருந்ததாக தி இந்து செய்தி கூறுகிறது.

கொரோனா தடுப்பு மருந்துமீதான காப்புரிமைக்கு விலக்கு- அமெரிக்காவை தொடர்ந்து ஜரோப்பிய ஓன்றியம் ஆதரவு

மேலும், கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதை, உலகளவில் ஏற்பட்டுள்ள அவசர நிலையாகக் கருதி, அறிவு மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதின் வழியாக, கொரோனவை துரிதமாக கட்டுப்படுத்த இயலும் என்று இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும் அழுத்தம் கொடுத்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, அமெரிக்க அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 2021 மே 9 ஆம் தேதி, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிப்புகளுக்கான பெருமையில் பங்கு கொடுக்காத எடிசன் – 1093 காப்புரிமைகள் பதிவு செய்தவர்

ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள அந்த பிரமாணப் பத்திரத்தில், “இந்திய காப்புரிமை சட்டம்,1970 ன் கீழ், தோகா பிரகடனம் மற்றும் டீ.ஆர்.ஐ.பி.எஸ் ஒப்பந்தத்தில் தற்போது சட்டரீதியிலான மாறுதல் கொண்டுவருவது, தடுப்பு மருந்து உற்பத்திக்கு எதிராக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முக்கியமான மருந்துகள் அல்லது தடுப்பூசிக்கு காப்புரிமை விதிப்பது தொடர்பான சட்டவிதிகளில் விலக்களிப்பது தொடர்பாக முடிவெடுப்பது என்பது, உலகளவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி கூறுகிறது.

காப்புரிமை வேண்டாம்; மக்களைக் காப்பாற்றினால் போதும்

கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ” அரசு கட்டாய உரிமம் (Compulsory licensing)  குறித்தும், காப்புரிமையை வைத்துக்கொள்வது குறித்தும் கருத்தில் கொள்ளலாம்” என்றும், மக்களின் கருத்துக்கு உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை குறித்து தி இந்து -விடம் பேசியுள்ள அறிவுசார் சொத்துரிமை வல்லுநர் கே.எம்.கோபகுமார், “டீ.ஆர்.ஐ.பி. எஸ் ஒப்பந்தத்தில் தளர்வு கொண்டுவரும் திட்டத்தை கொண்டுவந்ததற்கான மிகமுக்கிய காரணம், முதலாளிகளின் நலனை முடிவுக் கொண்டுவருவதற்குதான். ஆனால், அரசின் இந்த முடிவின் காரணமாக அது மீண்டும் முதலாளிகளுக்கே சாதகமாக அமையும்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படும் கோவிட் ஷீல்டு தடுப்பு மருந்தின் காப்புரிமை, ஆஸ்ட்ராசெனெகா என்கிற வெளிநாட்டு நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிறுவனத்திடம் உரிமம் பெற்றே சீரம் இந்தியா நிறுவனம், இந்தியாவில் கோவிஷீல்டு தயாரித்து வருகிறது. ஆனால், கோவாக்சின் என்ற மற்றொரு தடுப்பு மருந்து, இந்திய மருத்வது ஆராய்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கூட்டு தயாரிப்பு ஆகும்.

ஆகவே, காப்புரிமையில் ஒன்றிய அரசுக்கு பங்கு உள்ள, கோவாக்சின் மருந்தின் காப்புரிமையை கூட ஏன் அரசு தளர்த்தவில்லை என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்