Aran Sei

“குழந்தையின் வாயில் புணர்வது மிகப்பெரிய குற்றமல்ல” – அலகாபாத் உயர்நீதிமன்றம் விளக்கம்

குழந்தையின் வாயில் புணர்வதை கடுமையான பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது என்றும், அது சிறிய குற்றம் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

“குழந்தையின் வாயில் ஆண் உறுப்பை செலுத்துவது, கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றத்தின் கீழ் வராது. போக்சோ சட்டத்தின் பிரிவு 4ன் கீழ், அது சாதாரண பாலியல் குற்றம் என்ற வகையையே சேர்ந்தது” என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அனில் குமார் ஹோஜா தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர், 10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுவனிடம் இருந்த 20 ரூபாயை பற்றி அவருடைய உறவினர்கள் கேள்வி எழுப்பியபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை அவன் விளக்கியுள்ளான். இதைத்தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ஆடைக்கு மேல் தொட்டால் போக்சோ செல்லாது’ – மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் பிரிவு 6ன் கீழ், 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5,000 அபராதமும் விதித்துள்ளது.

போக்சோ சட்டத்தின் பிரிவு 6, கடுமையான பாலியல் குற்றத்தைப் பற்றி பேசுகிறது. இந்த பிரிவின் கீழ் தண்டிக்கப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் வழங்க முடியும்.

இந்நிலையில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து குற்றவாளி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார் ஹோஜா, வாயில் புணர்வதை கடுமையான பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது என்றும் அதை சாதாரண பாலியல் குற்றமாகவே கருத முடியும் என்றும் கூறியுள்ளார் என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்த நீதிபதி அனில் குமார் ஹோஜா, குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்