Aran Sei

இலங்கையில் சிறைபட்டிருக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும் – பிரதமருக்கு ஒ.பன்னீர்செல்வம் கடிதம்

லங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (அக்டோபர் 16) பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நீங்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்