விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகளிடம் ஒன்றுமில்லை என்று பாஜக நினைத்தாலும், எதிர்க்கட்சிகளோ வேறு பிரச்சினைகளைக் நாடாளுமன்றத்தில் எழுப்ப தயாராகி வருகின்றன.
இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதா என்பதைப் பற்றி நாங்கள் பேச வேண்டியதில்லை. ஆனால், எங்களிடம் தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் கை நிறைய உள்ளன” என்று கூறியுள்ளார்.
இதே கேள்வியை ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசியிடம் எழுப்பிய போது, “விவாதிக்கப்பட வேண்டிய மக்கள் பிரச்சனைகள் எதிர்க்கட்சிகளிடம் நிறைய உள்ளன. வரவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற கடுமையான பிரச்சனைகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் போன்ற தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் விவசாயச் சட்டங்களை ரத்து செய்திருக்கும் முடிவால் பாஜகவுக்கு அரசியல் லாபம் கிடைக்குமா என்ற கேள்விக்கு, லாபம் கிடைக்குமென்று நான் நினைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள், விவசாயிகளின் போராட்டத்தின் போது இறந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கான இழப்பீடு, பணவீக்கம், விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் நாட்டில் நிலவும் வேலையின்மை ஆகிய முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க தீர்மாணித்துள்ளன.
சீன எல்லை பிரச்சனை விவகாரம், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு மறுத்து வருவதும் நாடாளுமன்றத்தில் விவாத பொருளாக மாறலாம்.
ஏற்கனவே, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியானது, நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய 10 பிரச்சினைகள் அடங்கிய பட்டியலை தயாரித்துவிட்டது. அவற்றில், குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) ஆகியவை முக்கியமானவை.
‘விவாதங்களுக்கு அனுமதி இல்லையென்றால், பின் நாடாளுமன்றம் இருப்பது எதற்கு?’- ராகுல் காந்தி கேள்வி
இடதுசாரி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசுகையில், “எங்களைப் பொறுத்தவரை, பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக இருக்கும். காரணம், சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களின் வாழ்க்கையையும் அது பாதிக்கிறது. சிஏஏ மற்றும் என்ஆர்சி தவிர, சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற விவகாரங்களும் எடுத்துக் கொள்ளப்படும். விவசாயச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதற்காகப் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று என்றாகிவிடாது” என்று கூறியுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.