பாஜக தனது அரசிற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை குறிவைக்க மத்திய அரசின் நிறுவனங்களை பயன்படுத்துவது என்பது எப்போது நடக்கும் ஒன்றுதான் என்றும் அவர்களுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கும் அவர்களின் குரலை ஒடுக்குவதற்கும் பாஜக இந்நிறுவனங்களை பயன்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அனுராக் காஷ்யப், தாப்சி பன்னு ஆகியோரின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று (மார்ச் 3), அனுராக் கஷ்யப்பின் பாண்டம் பிலிம்ஸ், தயாரிப்பாளர் மது மாந்தேனா ஆகியோர் அலுவலகங்கள் உள்ளிட்ட மும்பை மற்றும் புனேவில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றன.
தாப்சி பன்னுவும் அனுராக் கஷ்யபும் பல்வேறு பிரச்னைகளில் அரசுக்கு எதிரான தங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து வந்த நிலையில், இந்தச் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைகள் குறித்து பேசிய மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித் துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான், “பாஜக தனது அரசிற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை குறிவைக்க மத்திய அரசின் நிறுவனங்களை பயன்படுத்துவது என்பது எப்போது நடக்கும் ஒன்றுதான். அவர்களுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கும் அவர்களின் குரலை ஒடுக்குவதற்கும் மத்திய அரசு இந்நிறுவனங்களை பயன்படுத்துகிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
டாப்சி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை – பேராட்டங்களை ஆதரித்தது காரணமா?
இதே குற்றச்சாட்டை எதிரொலிப்பது போல, நேற்று (மார்ச் 3), காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்ட்ரா மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டுதுறை அமைச்சருமான நவாப் மாலிக் பேசியுள்ளார்.
அதில், “அனுராக் காஷ்யப், தாப்சி பன்னு ஆகியோரின் அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இருவரும் மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள். அவர்களின் குரல்களை அடக்குவதற்காகதான் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என்று விமர்சித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரும் சிவசேனா கட்சியின் துணைத் தலைவருமான பிரியங்கா சதுர்வேதி தனது ட்வீட்டில், “நம் நாட்டின் வருமான வரித் துறை விரைவில் தனது அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறேன். அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறைக்கும் இதே வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Hope the Income Tax department of our country, is saved from bonded slavery status soon.
Same wishes for ED and CBI too 🙏🏼— Priyanka Chaturvedi (@priyankac19) March 3, 2021
நேற்று, இந்த சோதனைகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், “விசாரணை ஆணையங்கள் நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில்தான் விசாரணைகளை மேற்கொள்கின்றன. அதற்கடுத்து, அவை நீதிமன்றங்களுக்கும் செல்லும்.” என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களின் கருத்திற்கு எதிராக இந்திய பிரபலங்கள் கூட்டாக கருத்து தெரிவித்திருந்ததை தாப்சி விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த தாப்சி பன்னு, “ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையையும், ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையையும் அல்லது ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையையும் ஆட்டம் காணச் செய்கிறதென்றால், நீங்கள் உங்களுடைய நம்பிக்கைகளை வலுப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்கு ‘பிரச்சார ஆசிரியர்’ ஆகக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.
இதே போல இயக்குனர் அனுராக் கஷ்யப், 2019 ஆம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியாக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை, சுசாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தியின் கைது ஆகிய நிகழ்வுகளின்போது, கருத்து தெரிவித்திருந்ததோடு, இது தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் போதுமான அளவு குரல் எழுப்பவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.