Aran Sei

ஓர் உயிரை இழந்த பிறகு நீட்டுக்கு எதிராக நாளை தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்களா? – எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

வானத்தையே வில்லாக வளைப்போம் என்பதுபோல் பேசினீர்களே, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல நீட் தேர்வுக்கு எதிராக நாளை தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்களா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (செப்டம்பர் 12) எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மாநிலம் முழுவதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு  ரத்து என்பதுதான் என்று கூறியது. நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும் என்று அவர்களது இளைஞரணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர் வரை தேர்தல் மேடைகளில் அதிமுக அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மக்களைத் திசை திருப்பி, தேர்தலில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.

நான் கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில், நீட் தேர்விற்குத் தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு சட்டப்பேரவையில் முதல்வர் மழுப்பலான பதிலை அளித்தார். மேலும் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.

‘மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை’ – நடிகர் சூர்யா

ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் தேர்வினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து அறிய அமைத்த குழு, உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிற்கு பதில் மனுத் தாக்கல் செய்த திமுக அரசு நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மட்டுமே இந்தக் குழு ஆராயும் என்றும், இந்தக் குழுவின் பரிந்துரை நீட் தேர்வு நடைபெறுவதற்கு எந்தவிதமான இடையூறையும் / பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகவோ இந்தக் குழு அமைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது. மேலும், இது அரசின் கொள்கை முடிவு, இதற்கு எதிராக யாரும் மனுத் தாக்கல் செய்யமுடியாது என்றும், இந்தக் குழு அமைக்கப்பட்டதால் இந்த மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்த 14 பக்கத் தீர்ப்பில் இந்த அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள வாசகங்களை அப்படியே குறிப்பிட்டு, குழு அமைத்தது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதற்கு எதிரான இந்த மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளது.

நீட் தேர்வு பயத்தால் சேலம் மாணவர் தற்கொலை – எப்போது ஓயும் இந்த மரண ஓலம்

நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினுடைய பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன் மூலம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் திமுக அரசு குறிப்பிடவில்லை.

உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ அன்றே இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய்வீரம் காட்டிய ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக “பாதம் தாங்கிகள், பிஜேபியின் அடிமைகள்’’ என்றெல்லாம் அரசியல் நாகரீகம் இன்றி, எங்கள் மீது பழி சுமத்தியுள்ளார்.

‘மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று?’ – எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

தேர்தலில் ஜெயிக்க, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தேர்தலில் வெற்றிபெற்ற பின் தற்போது வாக்குறுதிகள் நிறைவேற்றாததற்குக் காரணம், மாநிலத்தின் நிதிநிலை மோசம் என்று எப்போதும்போல் மற்றவர் தலையில் காரணத்தைச் சுமத்தும் இந்த அரசு, நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது, நீட்டை ஒழிப்பதற்கான வழிமுறைகள் எங்களுக்குத் தெரியும் என்று பொதுக்கூட்ட மேடையில் வாய்ச்சவடால் அளித்தவாறு, கேலிச் சிரிப்பு சிரித்தபடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்தே நீட்டிற்கு எதிரானதுதான் என்று, மாணவச் செல்வங்களை வானத்தையே வில்லாக வளைப்போம் என்பது போல் ஏமாற்றும் விதத்தில் பேசியதன் விளைவு, நாம் இன்று மேலும் ஒரு மாணவச் செல்வத்தை நீட்டிற்குத் தாரை வார்த்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர், கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சியடையாத நிலையில், அரசியல் தலைவர்களின் தேர்தல் பேச்சை நம்பி, இந்த முறை நீட் தேர்விற்கு முழுமையாகத் தயாராகாமல், இன்று நடைபெறுகின்ற நீட் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு, இந்த முறையும் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்றசெய்தி அறிந்து மிகுந்த கவலையும், மனவருத்தமும் அடைந்துள்ளேன். தமிழக மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், சமுதாயத்தில் எந்த ஒரு கருத்தையும் சொல்லும்போதும், அது சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கூற வேண்டும். அதைவிடுத்து நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது, அதைத் தடுப்பதற்குண்டான வழிமுறைகள் எனக்குத் தெரியும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நாங்கள் இடும் முதல் கையெழுத்தே நீட்டிற்கு எதிரானதுதான் என்று மாணவச்செல்வங்களை ஏமாற்றும் விதத்தில் தேர்தல் சமயத்தில் பேசியதன் விளைவு, இன்று நாம் இன்னொரு மாணவச் செல்வத்தை பலி கொடுத்திருக்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்து ஆராய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா?, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து, குழப்பத்தில் உள்ள மாணவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தியதாக அறிக்கையில் நினைவுபடுத்தியுள்ளார்.

அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தனுஷின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். மாணவச் செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல், இன்று (12.9.2021) நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில், நாளை சட்டப்பேரவையில் நீட் தேர்வை எதிர்த்து இந்த அரசு தீர்மானம் கொண்டுவரப் போவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். நான் ஏற்கெனவே, எனது சென்ற அறிக்கையில் கூறிய அதே குறளை மீண்டும் ஒரு முறை இந்த அரசிற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

என்ற வள்ளுவர் வாக்கின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்த நாங்கள் நீட் தேர்வு உட்படத் தமிழகத்தை பாதிக்கும் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும், எச்சரிக்கையாக எடுத்து வைத்து செயல்பட்டோம். உங்களைப்போல் நாங்கள் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இனியாவது மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வு பற்றிய உண்மையான நிலையை உணர்த்துங்கள் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த அரசைக் கேட்டுக்கொள்வதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்