Aran Sei

டெல்லி எல்லை என்ன பாகிஸ்தான் எல்லையா? – அனுமதி மறுக்கப்பட்ட எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி

ந்தியா-பாகிஸ்தான் எல்லையைப் போன்று டெல்லி காசிப்பூர் எல்லை இருக்கிறது என்றும் போராடும் விவசாயிகளின் நிலை சிறையில் இருப்பது போன்று இருக்கின்றது என்றும் விவசாயிகளைச் சந்திக்க சென்று, காவல்துறையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை சபாநாயருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

’விவசாயிகளின் துயரை தனதாக கருதாத தலைவரால் நாட்டிற்கு எப்பயனும் இல்லை’ – பிரியங்கா காந்தி

நேற்று (பிப்பிரவரி 4) காலை, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஷிரோமனி அகாலி தளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்  ஹர்சிம்ரத் கௌர் பாதல் ஒருங்கிணைப்பில் திருமாவளவன், கனிமொழி, சு.வெங்கடேசன், ரவிகுமார், திருச்சி சிவா உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  மல்லிகார்ஜுன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சௌகத்தா ராவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே உட்பட எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், டெல்லி காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்க சென்றிருந்தனர்.

அப்போது, விவசாயிகளைச் சந்திக்க விடாமல், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிகள் – தடுத்து நிறுத்திய காவல்துறை

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “போராடும் விவசாயிகளுக்குக் குடிநீர், இணைய தள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களை எதிரிகளைப் போல் அரசு நடத்துகிறது.” என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து, மக்களவையில் விவசாயிகள் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுப்ரியா சுலே, சவுகதா ராய் இருவரும் மக்களவை சபாநாயர் ஓம் பிர்லாவைச் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.

பாஜக வரலாற்றை திருத்துகிறது; விவசாயிகளிடம் அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – திருச்சி சிவா

அக்கடிதத்தில், “காஜிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளைச் சந்திக்க மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் சென்றோம். ஆனால், அதற்கு டெல்லி காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் எல்லையைப் போன்று டெல்லி காஜிப்பூர் எல்லை இருக்கிறது.” என்று குற்றஞ்சாட்டப்பட்டதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

மேலும், “அங்குப் போராடும் விவசாயிகள் நிலை சிறைக்குள் இருப்பது போன்று இருக்கிறது. நாங்கள் என்ன காவல்துறையின் ஆட்சியின் கீழ் வாழ்கிறோமா. இந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எங்களை, விவசாயிகளைச் சந்திக்க ஏன் அனுமதிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்