வேளாண் சீர்த்திருத்தங்களைத் தங்கள் ஆட்சியின்போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது விவசாயிகளைத் தவறாக வழிநடத்துகின்றனர் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லி போவோம்) எனும் பேராட்டத்திற்கு விவசாயச் சங்கங்கள் அழைப்புவிடுக்கப்பட்டு, இப்போது தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயிகளின் போராட்டத்தில் தேசவிரோத சக்திகள் – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டத்திற்குப் பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாவட்ட விளையாட்டு வீரர்கள், அரசு அளித்த விருதுகளைத் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளனர். பஞ்சாப் கவிஞர் சுர்ஜித் பார்டெர் தன்னுடைய பத்மஸ்ரீ விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.
இவர்களைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களும் தங்களுடைய பதக்கங்களைத் திருப்பி அளிக்க முடிவு செய்து குடியரசுத் தலைவரைச் சந்திக்க இருக்கின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், விவசாயப் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக அம்பானி-அதானி நிறுவனங்களைப் புறக்கணிக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 8 ஆம் தேதி நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ”மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயச் சீர்த்திருத்தங்கள், பல ஆண்டுகளாக விவசாய அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கேட்டுக்கொண்டிருந்தவைதான். இந்திய அரசு எப்போதும் விவசாய நலனில் உறுதியாக உள்ளது. விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
The agriculture reforms that have taken place is exactly what farmer bodies and even opposition parties have been asking over the years.
Government of India is always committed to farmer welfare and we will keep assuring the farmers, addressing their concerns: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 15, 2020
மேலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக குஜராத்தில் விவசாயம், பால் மற்றும் மீன்வளத் துறைகள் முன்னேறியுள்ளதற்குக் காரணம் அரசாங்கத்தின் குறைந்தபட்ச குறுக்கீடு என்றும் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களில் திருத்தம் வேண்டாம், திரும்பப் பெற வேண்டும். சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என்று விவசாயச் சங்கங்கள் கூறியது நினைவுகூரத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.