Aran Sei

ஊட்டி மலை ரயில் தனியார்மயம்? – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

யக்குநர் பாலுமகேந்திரா படங்களில் ஊட்டியின் அழகை நாம் பல்வேறு கோணங்களில் பார்த்திருப்போம். எளிய மக்களுக்கு ஊட்டி எப்போதுமே ஒரு கனவுதான். மலர்க் கண்காட்சி, கடும் குளிர், டீ தூள், மலைமீது செல்லும் ரயில் என்று, எப்போதும் ஊட்டிக்கென்று தனி அடையாளங்கள் உண்டு.

இந்நிலையில், மேட்டுப்பாளையும் ஊட்டி இடையே நூற்றாண்டை கடந்து இயங்கும் மலை ரயிலை, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட மலை ரயிலை, தனியார் இயக்குவதற்கு அனுமதித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மொத்தமாக ரயில்வே நிர்வாகத்திற்குக் கட்டணத்தைச் செலுத்தி, மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நபர் ஒருவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிறப்பு ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரயிலின் முன்புறப் பகுதியும் காவி வண்ணத்தில் மாற்றப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “வழக்கமாக இயக்கப்படும் மலை ரயில் சேவை தொடங்காத நிலையில், சிறப்புக் கட்டண ரயில் சேவைக்கு மட்டும் ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. கட்டண ரயிலை மொத்தமாகத் தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், சிறப்புக் கட்டண ரயில் கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பதுடன், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் உதகை ரயில் பாதை தாரைவார்க்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.” என்று நடாராஜன் கூறியுள்ளார்.

”உடனடியாக ரயில்வே துறை உதகைச் சிறப்பு மலை ரயிலைத் தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்