Aran Sei

சாத்தான்குளம் படுகொலையின் ஓராண்டு நினைவு – காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் அறிக்கை

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறையினரால் கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாகி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக சாத்தான்குளம் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ள்ளது.. இப்பிரகடனத்தை உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திருமிகு.நித்யா ராமகிருஷணன் அவர்கள் வெளியிட, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணித் தலைவருமான கனிமொழி கருணாநிதி பெற்றுக் கொண்டார். இனிமேலும் இது போன்ற காவல் சித்திரவதையால் தமிழ்நாட்டில் எந்த ஒரு நபரும் பாதிக்கப்படக் கூடாது; எவரது உயிரும் காவல் சித்திரவதையில் பறிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இந்தப் பிரகடனம் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

”இன்றும் காலனியாதிக்க மனோபாவத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல்துறையின் அத்துமீறல்களை, சட்டப்புறம்பான நடவடிக்கைகளைத் தடுத்திடவும், சட்டத்தின் ஆட்சி, சனநாயக நெறிமுறை, மனித உரிமைகள் தர நிர்ணயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இனி காவல்துறையின் செயல்பாடுகள் அமைந்திட இந்த சாத்தான்குளம் பிரகடனம் பயன்படும். அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் வழங்கும் அடிப்படை உரிமைகள், குற்றவியல் நடைமுறைத் தொகுப்புச் சட்டம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் பன்னாட்டு மனித உரிமை தர நிர்ணங்களின் அடிப்படையில் இந்த சாத்தான்குளம் பிரகடனம் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

காரணமின்றி சட்டப்புறம்பாக கைது செய்தல், சட்டப்புறம்பாக காவலில் அடைத்து வைத்தல், கைது செய்வோரை அடித்துத் துன்புறுத்தி, சித்திரவதை செய்தல் போன்ற காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தப்படுவதற்கான சட்டப் பாதுகாப்புகள் இங்கு விவரிக்கப்படுவதோடு, ஒரு நபர் காவலரால் கைது செய்யப்படும்போது, அவருக்குள்ள சட்டப்பூர்வ உரிமைகள் எவை என்பதையும், காவல் விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் பற்றியும் விரிவாக இப்பிரகடனம் பட்டியலிடுகிறது.

‘திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் 1% இட ஒதுக்கீடு’: சட்ட வரைவை முன்மொழிந்த கர்நாடக அரசு

சட்டத்தோடு முரண்படும் குழந்தைகளையும், குற்ற வழக்குகளில் பெண்கள் மற்றும் மாற்றுத் திறானாளிகளை காவல்துறையினர் விசாரிக்கும் முறை பற்றியும் இப்பிரகடனம் குறிப்பிட்டுப் பேசுகிறது. இது போன்ற அத்துமீறல்களில் காவல்துறையினர் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட உயர் காவல்துறை அதிகாரிகளையும் பொறுப்பாளியாக்க வேண்டும். தவிர அனைத்து காவல்நிலையங்களிலும் சிறைகளிலும் பொருத்தப்பட வேண்டிய CCTV கேமராக்களின் முக்கியத்துவம் பற்றியும், கைது செய்யப்படுவோரை கைவிலங்கு போட்டு இழுத்துச் செல்லும் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இப்பிரகடனம் குறிப்பிடுகிறது.

நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை – ஜோடிக்கு பாதுகாப்பளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல் சித்திரவதை சம்பவங்களில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் பணிகள் பற்றியும், இன்றைய சூழலில் மாவட்ட – மாநில அளிவலான காவல்துறை புகார் ஆணையும் உடனே அமைப்பதன் முக்கியத்தும், தேவை பற்றியும் இப்பிரகடனம் குறிப்பிடுகிறது. இப்பிரகடனத்தை ஏற்று தமிழக அரசு சிறப்புச் சட்டமாக கொண்டு வர வேண்டுமென்று கூட்டியக்கம் கோரிக்கை வைக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்