மத்திய அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ”சுயசார்பு இந்தியா” எனும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்றைய தினம் (1-2-21) தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”வரும் 2021-22ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு விற்பனை செய்தவதன் வழியாக நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளும், இரு வங்கிகளின் பங்குகளும் அடங்கும். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.” என்று அவர் அறிவித்திருந்தார்.
மத்திய பட்ஜெட் 2021: இந்தியாவின் சொத்துக்கள் முதலாளிகளிடம் விற்கப்பட இருக்கிறது – ராகுல் காந்தி
குறிப்பாக, 2021-22ஆம் நிதியாண்டு தொடக்கத்தில் ஐடிபிஐ வங்கி, பிபிசிஎல், ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாச்சல் இஸ்பத் நிகம் உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் எல்ஐசி காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
மேலும், மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார்.
கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் “நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் மற்றும் அரசின் கூட்டுப் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெற முடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார் பங்களிப்பு அவசியம்” உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், ”அதானி, அதானி” என்கின்ற கோஷங்களை எழுப்பினர்.
’தேசியவாத பாடம் நமக்கு; தேசத்தின் வளம் தனியாருக்கு’ – பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி
இந்நிலையில், மத்திய அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ’சுயசார்பு இந்தியா’ எனும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், இந்த நூற்றாண்டின் தலைச் சிறந்த பட்ஜெட் என்றும் இது சுயசார்பு இந்தியாவின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த பட்ஜெட்டானது, “தேசிய நலன்களுடன் இணைந்த குறுகிய கால உத்வேகம், நிதி விவேகம் மற்றும் நீண்டகால தைரியமான பார்வை ஆகியவற்றின் சிறந்த சமநிலை” என்றும் தெரிவித்துள்ளார்.
This "once in a century" budget reflects the confidence of an Atmanirbhar Bharat. It's a great balance of short term impetus, fiscal prudence and long-term bold vision aligned to our national interests. #Budget2021 #AtmaNirbharBharat
— Gautam Adani (@gautam_adani) February 1, 2021
இந்த பட்ஜெட் சாமானிய மக்களுக்கு எதிரானது என்றும் தனியார் பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்கானது என்றும் இந்தியாவின் தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.