Aran Sei

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாட்களை உயர்த்துக – ஒன்றிய அரசுக்கு ஒடிசா முதல்வர் வேண்டுகோள்

காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்(நூறுநாள் வேலைத்திட்டம்), 2021-22 ஆம் ஆண்டிற்கான ஒடிசா பட்ஜெட்டையும் வேலை நாட்களையும் அதிகரிக்குமாறு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்று(நவம்பர் 1), நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கொரோனா தொற்று பரவலால் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்ததாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழுள்ள வேலைக்கான தேவை அதிகரித்ததாலும், கணிசமான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பி, ஒடிசாவிலேயே தங்கியிருப்பதாலும் இக்கோரிக்கை அவசியமான ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் நிலுவையில் உள்ள ரூ.1088 கோடியை விரைவில் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ரூ.1088.72 கோடியில், ஊதியத்தொகை நிலுவையாக ரூ.377.91 கோடியும் பொருள்சார் நிலுவையாக ரூ.710.81 கோடியும் அடங்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1,178 கோடி நிலுவையை உடனடியாக வழங்கும்படி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று(நவம்பர் 1) பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், “இத்திட்டத்துக்கு நிதி விடுவிக்கப்படாததால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி ரூ.1,178.12 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது. மேலும், மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டம்கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதார வாய்ப்பாக கருதப்படுகிறது. தற்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பல ஆயிரம் கிராமப்புறக் குடும்பங்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்