Aran Sei

‘ஃபோர்டு கார் நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – தமிழ்நாடு அரசிற்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

Image Credits: The Week

ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (செப்டம்பர் 14) ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்:

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம், விற்பனை பாதிப்பு மற்றும் தொடர் இழப்பு காரணமாக, சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையை அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் மூடுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பேரிடியை அளிப்பதாக அமைந்துள்ளது.

சென்னை ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் மூடப்படுகிறது – 4000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

கடந்த ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், மூலப் பொருட்கள் பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான தந்திரம் தான் இது என்றும், எப்பொழுது உற்பத்தி தொடங்கப்படும், எப்பொழுது தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லையென்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட ஊதிய உடன்படிக்கை ஓராண்டுக்கு மேற்கொள்ளப்பட்ட போதே சந்தேகம் அடைந்து, இது குறித்த கேள்வியை எழுப்பியதாக சிஐடியூ தொழிற்சங்கம் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளது. இது குறித்து, கருத்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர், ‘தொழிற்சாலையை மூடுவது என்பது கடினமான முடிவு தான். எங்களுக்கு இதைத் தவிர வேறு முடிவு தெரியவில்லை. பல்வேறு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டும், உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாகனங்களால் நீண்ட காலத்துக்கு லாபம் ஈட்டும் பாதையை தங்களால் அடைய முடியவில்லை’ என்று தெரிவித்து இருப்பதாகவும் பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது.

‘வேலை நாளுக்கும் விடுமுறை நாளுக்குமான இடைவெளியைக் குறைத்ததே மோடிஅரசின் வளர்ச்சி’ – ராகுல் காந்தி சாடல்

ஃபோர்டு நிறுவனத்தின் இந்த நடவடிக்கை காரணமாக, சுமார் 4,000 நேரடித் தொழிலாளர்களின் எதிர்காலமும், கிட்டத்தட்ட 40,000 மறைமுகத் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல், ஃபோர்டு மோட்டார் நிறுவனத்துக்கு மூலப் பொருட்களை விநியோகித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலைமையும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், கிட்டத்தட்ட நான்காயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடும் அபாயம் உள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படையக்கூடிய இந்தப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, ஃபோர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் இயங்கவும், தொழிலாளர்கள் தொடர்ந்து அங்கு பணிபுரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்