Aran Sei

ஜெயலலிதாவுடைய சிகிச்சைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – ஆறுமுகசாமி ஆணையத்திடம் ஒபிஎஸ் ஒப்புதல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெறவுள்ளது.

முன்னதாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராகும்படி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 21) ஆணையத்தின் முன் இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.

காலை 11.30 மணியளவில் ஆணையத்தின் முன் ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம், இரண்டு மணி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியுமா?” என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்விக் கேட்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரண விசாரணை – பதவி காலத்தை நீட்டிக்கக் கோரி ஆறுமுகசாமி கடிதம்

அதற்கு பதிலளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், “ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருந்ததை தவிர அவருக்கு இருந்த வேறு உடல் உபாதைகள் பற்றி எனக்கு தெரியாது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற எந்த விவரமும் எனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.

“அச்சமயம் நான் என்னுடைய சொந்த ஊரில் இருந்தேன். நள்ளிரவு நேரத்தில் என்னுடைய உதவியாளர் வழியாகவே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்துக்கொண்டேன். அடுத்தநாள் பிற்பகலில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த அப்போதைய தலைமைச் செயலாளரிடம் விவரங்களை முழுமையாக கேட்டறிந்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, “விசாரணை ஆணையம் அமைக்க கோரியது யார்? விசாரணை ஆணையம் அமைக்க முடிவு செய்தது யார்?” என்று ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

`அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா மன்னிக்கமாட்டார்கள்’ – திருமாவளவன்

“பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, மெட்ரோ ரயில் தொடக்கவிழா நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பார்த்தேன். அதன்பிறகு நான் அவரை பார்க்கவே இல்லை” என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழியாக தெரிந்துகொண்டேன். ஜெயலலிதா மருத்துவமனையில் நடத்திய காவிரி கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. காவிரிக் கூட்டம் குறித்து அறிக்கை வந்த பின்னரே அதுகுறித்து தெரிந்துகொண்டேன். காவிரி கூட்டத்தில் ஜெயலலிதா தனக்கு டிக்டேட் செய்ததாய் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன்ராவ் கூறினார்” என்று அவர் கூறியுள்ளார்.

‘ஜெயலலிதா ஊழலை நிரூபிக்க வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி’ – ஆ.ராசா

“இந்த காவிரி கூட்டத்திற்குப் பின்னர் ஜெயலலிதாவிற்கு இதய பிரச்சினை ஏற்பட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்குக முன்பே அவரது இதய பிரச்சினை குறித்து விஜயபாஸ்கர் என்னிடம் கூறினார். இதய பாதிப்பு ஏற்பட்டபோது என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

Source: இந்து தமிழ் திசை

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்