Aran Sei

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு – 27 ஆண்டிற்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு

27 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் அபயா எனும் கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், நேற்று (செவ்வாய்) சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

வழக்கின் வரலாறு 

1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி, பனிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 19 வயதான கன்னியாஸ்திரி அபயா, கோட்டயத்தின் பயஸ் கான்வெண்டின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

உள்ளூர் காவல்துறையும், குற்றவியல் பிரிவும் இதைத் தற்கொலை என்றன. பல மனித உரிமை இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகு, வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு  (சி.பி.ஐ) மாற்றப்பட்டது.  1996-ல் சி.பி.ஐ, அபயா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்ததும், நீதிமன்றம் அதை நிராகரித்து மறு விசாரணை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியது. 1997-ல் அபயா கொலை செய்யப்பட்டதாக சி.பி.ஐ தெரிவித்த போது, அதையும் நீதிமன்றம் நிராகரித்து மறு விசாரணை செய்ய சொன்னது என்கிறது தி க்விண்ட் இணையதளத்தில் வெளியான செய்தி.

பிறகு, 2008 ஆம் ஆண்டில் பாதிரியார்கள் தாமஸ் கொட்டூர், ஜோஸ் பூத்ருக்கையில் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்த பிறகு ஜாமீன் கிடைத்ததால் வெளியே வந்தனர். இப்படி நெடுங்காலம் நடந்து கொண்டிருந்த வழக்கு 27 வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டில் மீண்டும் தொடங்கியது.

திருப்புமுனை சாட்சியங்கள்  ! 

இப்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், இரண்டு பாதிரியார்களும், கன்னியாஸ்திரி செஃபியும் கான்வெண்டின் சமையலறையில் முறைகேடான நடத்தையில் ஈடுபட்டிருந்ததை அபயா பார்த்ததால் அவர் கொலை செய்யப்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளதாக க்விண்ட் இணையதளம் சொல்கிறது.

அபயாவின் உடலை கிணற்றில் இருந்து கண்டெடுத்த பிறகு, சமையலறையில் பொருட்கள் கலைந்து கிடந்ததை பார்த்ததாகச் சாட்சியங்கள் தெரிவித்தவை விசாரணையில் திருப்புமுனையாக அமைந்ததாக ந்யூஸ் மினிட் தளம் தெரிவிக்கிறது. அபயாவின் செருப்புகள், திறந்து கிடந்த ஃப்ரிட்ஜ் கதவு, தண்ணீர் பாட்டில், அவருடைய முக்காடு துணி மற்றும் வேறு சில பொருட்கள் சமையலறையில் சிதறிக் கிடந்ததை பார்க்கும் போது, அதிகாலையில் தண்ணீர் குடிக்க சென்ற அபயா தாக்கப்பட்ட பிறகு உயிருக்கு போராடியது தெரிய வந்தது.

இந்த வழக்கில் மேலுமொரு முக்கியமான சாட்சியமாகக் கருதப்படுவது, கொலை நடந்த தினத்தன்று கான்வெண்டில் திருட வந்த அதக்கராஜா என்பவரின் வாக்குமூலம். தாமஸ் எம் கொட்டூர் மற்றும் ஜோஸ் பூத்ருகையில் ஆகியோர் காலை நான்கு மணி அளவில் கான்வெண்டின் பின் பக்கம் உள்ள படிக்கட்டுகளில் செல்வதை பார்த்ததாக தன்னுடைய வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.

2019 விசாரணை & தீர்ப்பு

சில சாட்சியங்கள் வழக்கு விசாரணைக்கு உதவினாலும், சாட்சி கூறிய பலர் பிறகு தங்கள் தரப்பை மாற்றிக் கொண்டதால் வழக்கு நீண்டு கொண்டே போனது என்கிறது தி ந்யூஸ் மினிட்.

மேலும், 2018 ஆம் ஆண்டில் பாதிரியார் ஜோஸ் பூத்ருக்கையில் மீதிருந்த குற்றச்சாட்டுகள் போதுமான சாட்சிகள் இல்லாததால் நீக்கப்பட்டன. இதன் பிறகு, 2019 ஆகஸ்ட் மாதம் கேரள சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, இன்று, திருவனந்தபுரம் சி.பி.ஐ நீதிமன்றம் பாதிரியார்கள் இருவரும், கன்னியாஸ்திரி செஃபியும் அபயாவை கொலை செய்ததாக குற்றம்சாட்டி தீர்ப்பளித்துள்ளது. இவர்களுடைய குற்றத்திற்கான தண்டனை வியாழன் அன்று அறிவிக்கப்படும்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்