Aran Sei

நின்று வெல்லும் நீதி : 28 ஆண்டாக நீடித்த கொலைவழக்கில் தீர்ப்பு

ன்னியாஸ்திரி அபயா கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோருக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் வழங்கி  மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக லைவ்லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி,கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பயஸ் கான்வெண்டில், கன்னியாஸ்திரி அபயாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் இது தற்கொலை என காவல்துறையினரால் சொல்லப்பட்டது. பிறகு, மனித உரிமை குழுக்கள் காவல்துறையை எதிர்த்து போராடியதால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ, தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் அபயா கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டனர் என்கிறது க்விண்ட் இணையதளம்.

பாதிரியார்கள் தாமஸ் கொட்டூர், ஜோஸ் பூத்ருக்கையில் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் கான்வெண்டின் சமையலறையில் முறைகேடான நடத்தையில் ஈடுபட்டிருந்ததை பார்த்த அபயா, அதை வெளியே சொல்லிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்யப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு – 27 ஆண்டிற்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு

1993 தொடங்கி நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கில், கான்வெண்ட் சமையலறையில் கிடைத்த சாட்சியங்களும் மற்றும் கான்வெண்டில் திருட வந்த அதக்க ராஜா என்பவர் அளித்த வாக்குமூலமும், பெரும் திருப்பு முனையாக அமைந்தன. வழக்கு நடந்து கொண்டிருந்த போது , சாட்சி கூறிய பலர், பிறகு தங்கள் தரப்பை மாற்றிக் கொண்டதால், வழக்கு இருபத்தேழு வருடங்களாக நடந்து கொண்டிருந்தது என்கிறது நியூஸ் மினிட் தளம்.

இந்நிலையில், நேற்று (22/12/2020) திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் இவ்வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மறுநாள் (23/12/2020) தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, இன்று, அபயா கொலை வழக்கில் தண்டனையாக இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் வழங்கி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்