Aran Sei

ரயிலில் ஏற அனுமதிக்கப்படவில்லை – உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு

Credit : The New Indian Express

கார்கிவில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், ரயிலில் ஏற உக்ரைன் அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும், மீறி ஏறியவர்களை எட்டி உதைப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்கிவ் ரயில் நிலையில் சிக்கிக் கொண்டுள்ள 400 – 500 மாணவர்கள் ரயில்மூலம் லிவிவ் மற்றும் நாட்டின் மேற்கு பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

”பலமுறை வேண்டுகோள் விடுத்தும் ரயில்வே அதிகாரிகள் கதவுகளை திறக்கவில்லை. ஆனால் உள்ளூர் மக்களை ரயிலில் பயணிக்க அனுமதிக்கின்றனர். வாகனங்கள் கிடைக்காத பட்சத்தில் கார்கிவ் பகுதியில் இருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் பிசோசின் (11 கிமீ), பாபாய் (12 கிமீ) மற்றும் பெஸ்லியுதிவ்கா (16 கிமீ) பகுதிகளுக்கு நடந்தே செல்லுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது” என மாணவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோஜாப்பூவை வைத்து என்ன செய்வது? – ஒன்றிய அரசை விலாசிய உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்

நாங்கள் கடும் சிரமங்களுக்குப் பிறகு ரயில் நிலையத்தை அடைந்துள்ளோம். எலும்பை உறைய வைக்கும் குளிரில் பல மணி நேரம் காத்துக் கிடந்தும் எங்களால் ரயிலில் ஏற முடியவில்லை என கூறியுள்ளனர்.

தூதரக அறிவிப்பிற்கு முன்னதாகவே ரயில் நிலையத்தை அடைந்த மாணவர் அயூஷ் பாண்டே, “ரயில்வே அதிகாரிகள் எங்களை உள்ளே உட்கார அனுமதிக்கவில்லை. உள்ளே ஏறிய ஆப்பிரிக்க மாணவர்களையும் அவர்கள் வெளியேற்றினர். நாங்கள் ரயிலில் ஏறுவதை தடுக்க அவர்கள் தடியடி நடத்தினர்” என தெரிவித்துள்ளார்.

ரயிலில் ஏற முடியாததால், பிசோசினிற்கு நடந்தே செல்ல 300க்கும் அதிகமான மாணவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ள ஆயுஷ், “நாங்கள் பிசோசினில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் எங்களுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், நாங்கள் இந்தியா செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். நாங்கள் பிசோசின் சென்றடைய உக்ரைன் அதிகாரிகளும் உதவி செய்துள்ளனர்.” என கூறியுள்ளார்.

தூதரகத்தின் ஆலோசனையால் குழம்பித் தவிக்கிறோம் என தெரிவித்துள்ள முதலாம் ஆண்டு மாணவர், ”நாங்கள் பதுங்கு குழியில் தங்கியிருந்து அவரச செய்திகளை அனுப்பி வந்தோம். தூதகரத்தின் இந்த அறிவிப்பு எங்களை பேரழிவில் சிக்க வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Source : The New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்