கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க மாநில சிலிகுரியில் நேற்று முன்தினம் (மே 5) நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, சிஏஏ அமல்படுத்தப்பட மாட்டாது என்றும் இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வதந்திகளை பரப்புகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
”நான் வடக்கு வங்காளத்திற்கு வந்துள்ளேன். சிஏஏ அமல்படுத்தப்படாது என்று திரிணாமுல் காங்கிரஸ் வதந்திகளைப் பரப்புகிறது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கொரோனா அலை தணிந்தவுடன் சிஏஏவை அமல்படுத்துவோம் என்று கூற விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், சிஏஏ நடைமுறைப்படுத்தப்பட்டால், உள்ளூர் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள வடகிழக்கு மாணவர் அமைப்பு மற்றும் அசாம் மாணவர் சங்கம், “அதையும் மீறி ஒன்றிய அரசு அச்சட்டத்தை திணிக்க முயற்சித்தால், வெகுஜன மக்கள் போராட்டங்கள் மீண்டும் எழும்” என்று எச்சரித்துள்ளன.
இதுதொடர்பாக, வடகிழக்கு மாணவர் அமைப்பும் அசாம் மாணவர் சங்கமும் இணைந்து நேற்று (மே 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பழங்குடியினர் சிஏஏ-வை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இச்சட்டத்தை திரும்பப் பெறும் வரை வடகிழக்கு மாணவர் அமைப்பும் அசாம் மாணவர் சங்கமும் தொடர்ந்து போராடும்” என்று கூறப்பட்டுள்ளது.
“சிஏஏக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஒன்றிய அரசு சிஏஏ-வை திணிக்க முயன்றால், தேர்வுகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை மீண்டும் தொடங்குவோம்” என்று இரண்டு அமைப்புகளும் எச்சரித்துள்ளன.
Source: PTI
நாயன்மார்களே பல்லக்குள போகல உங்களுக்கு என்ன? | Surya Xavier Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.