Aran Sei

”கங்கை நதி சுற்றுலா தளம் அல்ல, எங்கள் தாய். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக்கூடாது” : விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இரண்டு வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் வாரணாசியில் உள்ள கங்கைக் கரைக்கு இந்து அல்லாதவர்கள் செல்லக் கூடாது எனவும், இது வெறும் கோரிக்கை அல்ல எச்சரிக்கை என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வாரணாசியின் மலைப்பாதைகளைச் சுற்றி ஒட்டி வருகின்றனர். இந்த சுவரொட்டிகளை ஒட்டும் புகைப்படங்களை அந்தந்த இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் தங்களது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். வாரணாசியில் உள்ள அனைத்து இந்துக் கோயில்களைச் சுற்றியும் இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்படும் என்று சமூக ஊடகங்களில் இந்துத்துவ தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

“இந்த சுவரொட்டிகள் வெறும் கோரிக்கை அல்ல, இந்து சனாதன தர்மத்தைப் பின்பற்றாதவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. கங்கை நதியின் மலை தொடர்கள் மற்றும் காசியில் உள்ள கோவில்கள் ஆகியவை இந்து மதம் மற்றும் எங்கள் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள். இந்த இடங்களுக்கு வருபவர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அவர்கள் வரவேற்கப்படுவார்கள். இல்லையென்றால், “எங்கள் புனித இடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுவோம்” என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ராஜன் குப்தா மிரட்டல் விடுத்துள்ளார்.

https://twitter.com/search?q=Vishwa%20Hindu%20Parishad&src=typeahead_click

“கங்கை நதி எங்கள் தாய், அது ஒரு சுற்றுலா தளம் அல்ல. கங்கையைச் சுற்றுலா தளம் என்று நினைப்பவர்கள் இந்த இடத்திற்கு வரக் கூடாது. அதையும் மீறி வரத் துணிந்தால் நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பஜ்ரங்தளத்தின் வாரணாசி ஒருங்கிணைப்பாளர் நிகில் திரிபாதி ருத்ரர் மிரட்டியுள்ளார்.

மக்களைப் பிளவுபடுத்தும் வலதுசாரி அமைப்புகளின் இது போன்ற செயல்களைப் பற்றி காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளதாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ராகவேந்திரா சௌபே தெரிவித்துள்ளார். சுவரொட்டிகளை ஒட்டியவர்களின் புகைப்படங்கள் கிடைத்தும் அவர்களின் மீது காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சர்ச்சைக்குரிய இந்த சுவரொட்டிகள் குறித்து உயர் காவல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை இந்த விடயத்தைக் கவனத்தில் கொண்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பின்னர், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரணாசி துணை காவல் ஆய்வாளர் அலுவலக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இந்து அல்லாதவர்கள் கங்கைக்கு வரக் கூடாது என சுவரொட்டிகள் ஒட்டப்படுருக்கும் தொகுதி, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்