மணிப்பூர் மாநிலம் ஹெங்லெப் தொகுதியின் பாஜக அல்லாத வேட்பாளர்கள் கூட்டாக தேர்தல் ஆணையத்தை அணுகி, பாஜகவிற்கு ஆதரவான தடைசெய்யப்பட்ட குழுகள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி, வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 1), காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, ஜேடியூ மற்றும் சிவசேனா வேட்பாளர்கள் இணைந்து அளித்துள்ள அப்புகாரில், குகி தேசிய முன்னணி, குகி தேசிய முன்னணி (சௌகம்), குகி தேசிய முன்னணி (சாமுவேல்) மற்றும் குகி தேசிய இராணுவம் ஆகிய குழுக்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
“தடைசெய்யப்பட்ட குழுக்களின் உறுப்பினர்கள் பல வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றினர். பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட இந்த குழுக்கள், வாக்காளர்கள் மற்றும் சிவசேனா, தேசிய மக்கள் கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆதரவாளர்களை மிரட்டி, அவர்களின் வாக்காளர் சீட்டை பறித்து, அவர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தனர்” என்று அப்புகார் கூறப்பட்டுள்ளது.
“மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் 135A, 58 & 58A ஆகிய பிரிவுகளின்படி, அவ்வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையிலும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
‘பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், மதுக்கடைகள் திறக்கப்படும்’ –மணிப்பூர் முதலமைச்சர்
23 வாக்குச்சாவடிகளில் இந்த சம்பவங்கள் நடந்ததாகக் கூறி புகைப்பட ஆதாரங்களையும் இப்புகாரில் இணைத்துள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.