Aran Sei

விவசாயிகள் போராட்டத்திற்கு பயந்தே குளிர்கால கூட்டத்தொடர் ரத்து – டி.ராஜா

credits : indian express

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் ரத்துசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹத் ஜோஷி அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிர் ரஞ்சன் செளத்ரி “சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நெடுஞ்சாலைகளில் விவசாயிகளின் போராட்டம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில் அவையில் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டும்” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள பிரல்ஹத் ஜோஷி, டெல்லியில் சமீப காலங்களில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. குளிர்காலத்தில் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினம். எனவே அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டுக் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுகிறது என முடிவெடுத்துள்ளதாகப் அதற்கு பதிலளித்துள்ளார்.

கொரோனாவுக்கு அடுத்த பலி – மும்பை, புனே மிரர் பத்திரிகைகள் மூடப்படுகின்றன

இதற்கு மறுப்பு தெரிவித்துளள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும் மூத்த காங்கிரஸ் உறுப்பினருமான குலாம் நபி ஆசாத்திடம் கூட குளிர்காலக் கூட்டத்தொடார் ரத்து செய்யப்படுவது குறித்து கருத்து கேட்கப்படவில்லை எனவும் இந்த அரசு பொய் சொல்கிறது எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குளிர் கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் “ஊரடங்கில் இருக்கும் ஜனநாயகம்” எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அரண்செய் – யிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ”குளிர்கால கூட்டத்தொடர் என்பது நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும். முன்னதாக நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொரோனாவைக் காரணம் காட்டி நாட்கள் குறைக்கப்பட்டது. தற்போது குளிர்கால கூட்டத்தொடரே ரத்து செய்யப்பட்டிருக்கிறது” எனக் கூறினார்.

கொரோனா காலத்தில் கூடும் நாடாளுமன்றம் – விவாதிக்கப்படும் பிரச்சினைகள்

“கொரோனாவைக் காரணமாக வைத்து பல விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யாமலே நடைமுறைபடுத்தி இருக்கிறார்கள்.  சுய பாரதம் என்ற பெயரில் நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அவ்வாறு விவாதம் செய்யாமல் அறிவிக்கப்பட்டதுதான்” என்று டி.ராஜா தெரிவித்தார்.

கொரோனாவைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் எதையும் விவாதம் செய்யாமல் அரசு ஆணையின் மூலமாக பாஜக செயல்படுத்த நினைக்கிறது என்று கூறிய டி.ராஜா குளிர்கால கூட்டத் தொடர் ஆரம்பித்தால் விவசாயிகள் போராட்டம்தான் அதன் மையப் பொருளாக இருக்கும் எனவும் அதைத் தவிர்க்கவே கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என கூறினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்