Aran Sei

” சிஏஏ-ன் கீழ் தடுப்பு முகாம்கள் அமைக்க முடியாது, தேவைக்கேற்ப மாநிலங்கள் அமைத்துள்ளன ” – மத்திய உள்துறை அமைச்சகம்

image credit : indiatoday.in

குடியுரிமை திருத்தச் சட்டம் அல்லது இந்தியக் குடிமக்களின் தேசிய பதிவேடு ஆகியவற்றில் “தடுப்பு முகாம்”களை அமைப்பதற்கான ஏற்பாடு இல்லை என்றும், மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் அமைத்துள்ள தடுப்பு முகாம்கள் பற்றிய விபரம் மத்திய அளவில் பராமரிக்கப்படவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த மத்திய உள்துறை துணை அமைச்சர் நித்யானந்த் ராய், அத்தகைய தடுப்பு முகாம்கள் உள்ளூர் தேவைகளுக்கேற்ப அந்தந்த மாநில அரசுகளால் ஏற்படுப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இந்த முகாம்கள், சட்டவிரோத குடிபெயர்ந்தவர்களையும் வெளிநாட்டவர்களையும் காவலில் வைப்பதற்காக அமைக்கப்படுகின்றன. தமது சிறைத் தண்டனையை முடித்த பிறகு, நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கான ஆவணங்கள் இல்லாததால் காத்திருப்பவர்கள் இந்த தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டிருப்பதும், உரிய ஆவணங்கள் இல்லாதவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் என்.ஆர்.சி தடுப்பு முகாம்களில் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்

பிப்ரவரி 28, 2012 தேதியிட்ட உத்தரவில் உச்சநீதிமன்றம், “தனது சிறைத் தண்டனை காலத்தை கழித்து விட்ட வெளிநாட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்றும், “அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது வரையில் அவர்களது நகர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் பொருத்தமான இடத்தில் வைக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளது.

தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை?

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மார்ச் 7, 2012-ல் கூறியிருக்கிறது.

2019-ம் ஆண்டில் மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) முஸ்லீம்களை குடியுரிமை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவராக இருந்தால், இந்திய குடியுரிமை கோரலாம்.

முஸ்லீம்களை விலக்கி வைக்கும் அந்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டங்களின் போது 69 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “காலவரிசையை புரிந்து கொள்ளுங்கள். முதலில் குடியுரிமை சட்ட மசோதாவை கொண்டு வருவோம். அதன் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவோம். தேசிய குடிமக்கள் பதிவேடு வங்காளத்துக்கு மட்டும் இல்லை, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு [முஸ்லீம் அல்லாதவர்களுக்கு] குடியுரிமை வழங்கப்படும். எனவே, அகதிகள் கவலைப்பட வேண்டாம். ‘ஊடுருவியவர்கள்’ தப்பிக்க முடியாது” என்றும் அவர் கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்