Aran Sei

மக்களை திசை திருப்பும் ஐபிஎல் செய்தியை வெளியிட மாட்டோம் – தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவிப்பு

கொரோனா தொற்றால், நம் நாடு எட்டியுள்ள மோசமான சூழலில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்குறித்த செய்திகளை வெளியிடமாட்டோம் என்று ஆங்கில நாளிதழான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 25), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிட்ட ஆசிரியர் குறிப்பில், “கொரோனா பெருந்தொற்று பரவலின் மோசமான கட்டத்தை இந்தியா எட்டியிருக்கிறது. இச்சூழலில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சுகாதார அமைச்சகத்தின் தினசரி அறிவிப்புகளில் இடம்பெறும் புதிய தொற்று எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் விண்ணை முட்டுகின்றன. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் போன்ற உயிர் காக்கும் மருந்துகளைத் தேடியலையும் தனிநபர்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து அவரச கால செய்திகள் வந்த வண்ணம் உள்ளன என்றும் படுக்கைகள் பற்றாக்குறையால், புதிய நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. சுடுகாடுகளில் நிறையும் கூட்டம் இருதயத்தை கனக்க செய்கிறது என்றும் ஆசிரியர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கொரோனா தீவிரமடைந்துள்ள சூழலில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பொறுத்தமற்றது இல்லையா?’ – கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட்

“இது போன்ற ஒரு துன்பகரமான நேரத்தில், இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பது பொருத்தமற்றது என்று நாங்கள் கருதுகிறோம். இது பெரும் வணிகமாகிவிட்டது. பிரச்சனை விளையாட்டின் மீதல்ல, அது நடத்தப்படும் காலம்தான். இதற்கும் முன் நாம் சந்தித்திறாத ஒரு நெருக்கடியில் நாம் உள்ளோம் என்பதை கிரிக்கெட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறிப்பட்டுள்ளது.

மேலும், “இச்சூழ்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்குறித்த செய்திகளை நாங்கள் வெளியிடமாட்டோம். நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை இது தொடரும். இந்த மோசமான சூழலில், நம் தேசத்தின் கவனத்தை உரிய விஷயத்தில் செலுத்துவதற்கான ஒரு சிறிய முன்னெடுப்பே இது.” என்று அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்