Aran Sei

எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிக்க அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை – மத்திய அரசு

Image Credits: The Tech Portal

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும், எரிவாயுவிற்கான விலையை நிர்ணயிக்க அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனங்கள், சந்தை விலையைக் கண்டுபிடிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும்.

கடந்த வாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணையத்தளம் வழியாக நடைபெற்ற ஏலத்தின் மூலம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான சந்தை விலைகளைக் கண்டுபிடிப்பதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்தது.

அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் பழைய எரிவாயு எடுக்கும் கிணறுகள் தவிர மற்ற அனைத்துத் கிணறுகளிலிருந்தும் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவுக்கு, 2017-ம் ஆண்டிலிருந்து அரசு விலை நிர்ணய உரிமையை வழங்கியுள்ளது. இந்த அரசு நிறுவனங்கள், ஒதுக்கப்பட்ட படுகைகளிலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்கிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் மற்றும் ஓஎன்ஜிசி (ஒதுக்கப்படாத படுகையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு) பயனாளர்களுக்கு எரிவாயுவை ஏலம் விடுகின்றன. அவர்கள் பொதுவாக ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் பயனாளர்களிடம் ஏலம் விடுவார்கள்.

அவர்கள் தொடர்ந்து விலையை நிர்ணயிக்கத் திட்டத்தை வகுப்பார்கள். ஆனால் இப்போது முன்னரே ஐந்து ஏஜன்சிகளிடமிருந்து இணையதளம் வழியாக ஏலம் கேட்கவேண்டியிருக்கும் என்று அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட், எம்ஜங்க்ஷன் சர்வீசஸ் லிமிடெட், ஆர்ஐடிஎஸ், எம்எஸ்டிசி மற்றும் சிஆர்ஐஎஸ்ஐஎல் ரிஸ்க் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சொல்யூஷன் லிமிடெட் ஆகியவை அந்த ஐந்து ஏஜென்சிகள் ஆகும்.

அக்டோபரில் மத்திய அமைச்சரவை, ஏற்கனவே விலை நிர்ணய சுதந்திரம் இருந்த நிறுவனங்களுக்குச் சந்தைப்படுத்துதலுக்கான சுதந்திரத்தையும் வழங்கியது. அதனுடன், விலையை நிர்ணயிக்க ஒழுங்குபடுத்தப்பட்ட ஏலத்திற்கு ஒப்புதல் அளித்தது.

நிறுவனங்கள் “டெண்டர் / ஏல சலுகை வடிவமைப்பு, தகுதி அளவுகோல்கள், டெண்டர் கட்டணம், எரிவாயு விற்பனை ஒப்பந்தத்தின் முக்கிய விதிமுறைகள், மற்றும் பிற நெறிமுறைகளை நிர்ணயித்துக்கொள்ளலாம். வாங்குபவர்களுக்கு இடையே போட்டியை ஊக்குவிப்பது மற்றும் வழங்கப்படும் இயற்கை எரிவாயுவின் மதிப்பை அதிகரிப்பதின் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி, ஒதுக்கப்பட்ட படுகைகளிலிருந்து எடுக்கப்பட்ட எரிவாயுவுக்கு அரசு விலை நிர்ணயிக்கும். ஆழ்கடல் போன்ற ஆபத்தான படுகைகளிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயித்து விற்பனை செய்யும் உரிமை ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்