Aran Sei

 நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால், போராட்டத்தில் ஈடுபட்டக் கூடாது என எந்த சட்டத்திலும் இல்லை –உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் கருத்து

நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகு, அதே விவகாரத்திற்காக போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர் தெரிவித்துள்ளார்.

தி வயர் இணையதளத்திற்கு அளித்த நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது நீதிபதி கான்வில்கர்,”வேளாண் சட்டங்களை எதிர்த்து நீங்கள் (விவசாயிகள் சங்கங்கள்) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும்போது, போராட்டத்தில் ஈடுபட உங்களுக்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும். நீங்கள் நாடாளுமன்றத்தில் முறையிடுங்கள் அல்லது நீதிமன்றத்திற்கு வாருங்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்ய முடியாது” என தெரிவித்திருந்தார்.

இதனை மேற்கோள் காட்டி, “ஒரு தனிநபர் அல்லது அமைப்பு நீதிமன்றத்திற்கு செல்லும்போது, அதே நோக்கத்திற்காக போராடும் உரிமை சட்டத்தால் தடுக்க அல்லது மறுக்கப்படுகிறதா?” என மதன் பி லோகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “உங்கள் கேள்விக்கான பதிலை நான் பகுதிகளாக பிரித்துக் கொள்ள விரும்புகிறேன். முதலாவது ஒரு தனிநபர் நீதிமன்றத்திற்கு சென்றால்?.

விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்கை எடுத்துக் கொள்வோம். ஒரு தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இது நாட்டின் மற்ற விவசாயிகள் போராடும் உரிமையைத் தடுக்குமா? நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு தனிநபர் வழக்கு தொடர்ந்தால் அவரின் போராடும் உரிமை மறுக்கப்படுகிறதா என்றால், அரசியலமைப்பு சட்டத்தில் அப்படி எதுவும் கூறப்படவில்லை. இந்திய அரசியலமைப்பில் அமைதியாக போராடுவதற்கான உரிமை, கருத்து சுதந்திரத்திற்கான உரிமை இரண்டிற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “இரண்டாவதாக, ஒரு விவசாயிகள் அமைப்பு நீதிமன்றம் செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு அமைப்பு நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி செய்ய முடியாது என செல்லப்படுகிறது. ஏன் முடியாது என்பதே என் கேள்வி. ஒரு தனிநபரோ அமைப்போ நீதிமன்றம் சென்றால் அது மற்றவர்களின் போராடும் உரிமையை மறுக்க முடியாது” என மதன் பி லோகூர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, ஒரு மூன்றாம் நபர் பொதுநல வழக்கு தொடர்கிறார் என்று வைத்துக் கொள்வோம். விவசாயியாக இல்லாத ஒரு தனிநபர், பொது நலன் கருதி விவசாய சட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் பட்சத்தில், இது மற்றவர்களின் போராடும் உரிமையை மறுக்காது” என தெரிவித்துள்ளார்.

எனவே நீதிமன்றத்தில் யார் வழக்கு தொடர்ந்தாலும், அதனால் அவர்களின் போராடும் உரிமையைத் தடுக்கவோ மறுக்கவோ முடியாது என மதன் பி லோகூர் கூறியுள்ளார்.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்