Aran Sei

‘குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதுவும் இல்லை’ – தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை

டந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றதால், கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த வெளிநாட்டினர் 36 பேரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீன் மர்காஸில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்க, உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்தனர். தப்லீக் ஜமாத் நிகழ்விற்காக மக்கள் ஒன்று கூடியது கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறுவதாக இருந்தது, விசா விதிமீறல்களும் நடந்துள்ளது எனக் கூறி டெல்லி காவல்துறை அந்நிகழ்வில் பங்கேற்றவர்களை கைது செய்தது.

தப்லீக் ஜமாத் நிகழ்வு தான் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பரவ காரணம் என இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம், இது குறித்த விசாரணை தொடங்கியது. அப்போது, தப்லீக் ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 188 (அரசு அதிகாரியின் ஆணைக்கு கீழ்ப்படியாமை), 269 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நோய்த் தொற்றை பரப்புதல்) மற்றும் பெருந்தொற்று சட்டம் 1897, சட்டப்பிரிவு 3 (விதிமுறை மீறுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்டவர்கள், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், சூடான், துனிசியா, ஸ்ரீலங்கா, தன்சானியா, தாய்லாந்து, கசகஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

இந்த வழக்கில் செவ்வாய் அன்று (15.12.2020) நடைபெற்ற விசாரணையில், “காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ் குமார், நிகழ்வில் பங்கேற்ற 2,343 பேரில், 952 வெளிநாட்டினர் விதிமுறைகளை மீறியிருப்பதாக எப்படி அடையாளம் கண்டார் என்பதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்த பரிசோதனைகளும் செய்யாமல், உள்துறை அமைச்சகம் கொடுத்த பட்டியலை வைத்தே வெளிநாட்டினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது” என டெல்லியின் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் அருண் குமார் கர்க் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மர்காஸ் வளாகத்திற்குள் இருந்ததை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை என்பதாலும், சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதாக டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றதால் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர், அறுபது நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பிறகு, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால், வேறு தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலர் நாடு திரும்பினால் போதும் என பேர உடன்படிக்கையை (plea bargain) ஏற்றுக் கொண்டு, பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு, இந்தியாவில் இருந்து புறப்பட்டனர். கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்