”கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்புக்கும், தேர்தல் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என அசாம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்றைய தினம், 2,73,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.50 கோடியைக் கடந்துள்ளது எனவும் கொரோனா நோய்த்தொற்றால் 1,78,769 பேர் மரணமடைந்துள்ளனர். ஒரு நாளில் ஏறக்குறைய 1619 பேர் மரணமடைகின்றனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், 1,29,53,821 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும், இதன் மூலம் கொரோனா தொற்றால் மரணமடைவோர் எண்ணிக்கை 1.19 % சதவீதம் குறைந்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழலில், வடகிழக்கு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில், அசாம் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டார். அப்போது, ”கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், அசாம் மாநிலத்தில் மூன்று கட்ட தேர்தல் தேவையா, ஏன் ஒரே கட்டமாக தேர்தலை முடித்திருக்க கூடாது?” என்று நெறியாளர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த, அவர், “ கடந்த காலங்களில் வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்தவர்கள் மட்டுமே கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதற்கும் தேர்தல் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நிறுவ எந்தத் தரவுகளும் இல்லை. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்புக்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
அசாம் போடோலாந்த் தலைவரை மிரட்டிய பாஜக தலைவர் : பரப்புரைக்கு 48 மனி நேரம் தடை விதித்த தேர்தல் ஆணையம்
முன்னதாக, ”அசாம் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று இல்லை, பொதுமக்கள் யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை” என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.