Aran Sei

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைவோம் – எதிர்கட்சிகள் அறைகூவல்

Image Credits: DNA India

 2024  ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைந்து செயலாற்றுவதே  நமது உச்சபட்ச இலக்கு என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

மேலும், சுதந்திர போராட்டத்திற்கு மதிப்பளிக்கக்கூடிய, அரசியலமைப்பின் கொள்கைகள் நிலைநிறுத்தப்படக்கூடிய வகையிலான அரசாங்கத்தை அளிக்க   வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் உள்ள 19 கட்சித் தலைவர்களுடன் இணையவழியில் நடந்த கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.

மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நமது மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசினை  பாதுகாக்க  இந்தச் சந்தர்ப்பத்தில் இந்திய மக்கள்  எழுச்சியுற வேண்டும்” என்றும், வரும் செப்டம்பர் 2௦ மற்றும் 3௦ ஆகிய தேதிகளுக்குக்கிடையே ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும்   தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒன்றிணைந்து பணியாற்றுவதை விட வேறு மாற்று வழி நமக்கு இல்லை. தேசத்தின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒவ்வொரு எதிர்க்கட்சியும் பாஜகவுக்கு எதிராகக் களமாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தக்கூட்டத்தில், திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத் பவார், ஜேஎம்எம் தலைவர் மற்றும் ஜார்க்கண்ட் முதலமைச்சர்  ஹேமந்த் சோரன், ஆர்.ஜே.டி கட்சியின் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த   ராஜா, பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி, தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன் கார்கே, ஏ.கே.அந்தோணி (கேரளா காங்கிரஸ்) மற்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஐ.யு.எம்.எல் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டறிகையில், பெகசிஸ் வழியாக தொலைபேசி வேவு பார்க்கப்பட்டது,  விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், கோவிட் -19 தொற்றுநோயின் மோசமான மேலாண்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம்” என்று தெரிவித்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நீர்த்துப்போன  சட்டங்கள் குறித்து விவாதிக்க அரசு  வாய்ப்பு மறுக்கிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், இந்தக் கூட்டத்தில் 11 கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர். அவை; இந்தியாவில் தடுப்பு மருந்துகளை  உற்பத்தி திறன்களை அதிகரிக்கவும் மற்றும் உலகளவில்  தடுப்பு மருந்து வாங்கவும், வருமான வரி வரம்புக்கு வெளியே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ .7,500 இலவசமாக வழங்க வேண்டும். பெட்ரோலியம் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை குறைக்கவும் , சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது, மூன்று வேளாண் சட்டங்களை  ரத்து செய்ய வேண்டும்,  பொதுத் துறையின் கட்டுப்பாடற்ற தனியார்மயமாக்கலைத் தடுத்து நிறுத்த வேண்டும், பெகாசிஸ் மற்றும்  ரஃபேல் ஒப்பந்தம்குறித்து  நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை, ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை செய்ய வேண்டும், பீமா கோரேகான் வழக்கு மற்றும் சிஏஏ எதிர்ப்பு போரட்டங்களில்  ஊபா சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய  வேண்டும்  என்றும் அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்