Aran Sei

`மனசாட்சி இருந்தால் நிதிஷ்குமார் பதவி விலகுவார்’ – தேஜஸ்வி யாதவ்

“மனசாட்சிப்படி நடந்தால், நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகுவார். மக்கள் மாற்றத்துக்காகவே தீர்ப்பளித்தார்கள். ஆனால், சூழ்ச்சியால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. 243 சட்டப்பேரவைகளுக்கும் நடந்த தேர்தலில் 125 இடங்களை நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி வென்றது. 110 இடங்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் மகா கூட்டணி கைப்பற்றியது. இருப்பினும், மாநிலத்தில் 75 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் பாட்னாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மகா கூட்டணியின் சட்டப்பேரவைத் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் நிருபர்களுக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் “இந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 3-வது இடத்தைத்தான் பிடித்துள்ளது. ஆனாலும், நிதிஷ் குமார் மனசாட்சிப்படி நடப்பவராக இருந்தால், அவர் முதல்வர்பதவியில் இருந்து இறங்கியிருப்பார். மக்களின் தீர்ப்பை மதித்து நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போகிறேன் என்று வாக்குகளைக் கவர மக்களிடம் நிதிஷ் குமார் பேசினார். அவர் அரசியல் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கும்போது அவமரியாதை குறைவான செயல்களில் எல்லாம் ஈடுபடக் கூடாது.” என்று கூறியுள்ளார்.

“பீகாரில் மக்கள் மாற்றத்தை விரும்பித்தான் வாக்களித்தனர். ஆனால், அந்த முடிவு செயற்கையாகத் திருத்தப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பணம், அதிகார பலம், சூழ்ச்சி ஆகியவற்றால் வென்றுவிட்டது. நாங்கள் எங்களுக்குத் தீர்ப்பளித்த மக்களிடம் செல்வோம். அவர்கள் நாங்கள்தான் வரவேண்டும் என்று விரும்பினால் நாங்கள் வருவோம். எங்கள் கட்சியைவிட, அதாவது மகா கூட்டணியைவிட, தேசிய ஜனநாயகக் கூட்டணி 12,270 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

“எவ்வாறு எங்களைவிட 15 இடங்கள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற முடியும். வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்கும் பட்சத்தில், நாங்கள் 130 இடங்கள் வரை கைப்பற்றுவோம் என நம்பினோம். எங்கள் கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதி குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம். பல தொகுதிகளில் தபால் வாக்குகள் கடைசிக் கட்டத்தில்தான் எண்ணப்பட்டன. தொடக்கத்திலேயே தபால் வாக்குகள் எண்ணப்படுவதுதான் வழக்கம். இதில் 900 தபால் வாக்குகள் செல்லாதவையாக இருந்தன. அவையும் கணக்கில் கொள்ளப்பட்டன.” எனக் கூறியுள்ளார்.

“ஒரு பதவி, ஓர் ஓய்வூதியத் திட்டத்துக்கு நாங்கள் அளித்த ஆதரவால், எங்களுக்கு ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் ஆதரவு பெரிதாக ஏற்பட்டதால் இதைச் சந்தேகிக்கிறோம். நாங்கள் சந்தேகப்படும் சில தொகுதிகளில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி அதை வீடியோ மூலம் பதிவிட வேண்டும். தேர்தல் அதிகாரிகள் பாஜகவின் சிறையில் அடைப்பட்டது போன்று செயல்பட்டார்கள். எங்களின் குறைபாடுகளைத் தேர்தல் ஆணையம் களையாவிட்டால் சட்டரீதியான தீர்வுகளை நோக்கி நகர்வோம்”. இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்