Aran Sei

தேர்தல் அதிகாரிகளுக்கு நிதிஷ் குமார் நெருக்கடி – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பீகார் வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரிகளுக்கு ஐக்கிய ஜனதா தள தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான நிதிஷ் குமார் நெருக்கடி கொடுத்ததாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா பொது முடக்கக் காலத்தில் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் பீகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுவந்தது. பிறகு நிலைமை தலைகீழாய் மாறி ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது.

இதில், பாஜக முன்னிலை பெற்றாலும், பாஜவுக்கும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும் இடையே வெறும் 10 தொகுதிகள் மட்டுமே வெற்றி வித்தியாசம் உள்ளது.

இந்நிலையில், நெருக்கமான போட்டி உள்ள தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமார் நெருக்கடி கொடுத்ததாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் “12 மணி நேரமாகியும் பிகார் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை. பல தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வேட்பாளர்களுக்கும் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கும் குறைந்த வாக்கு வித்தியாசத்தோடு நெருக்கமான போட்டி உள்ளது. அதுபோன்று நெருக்கமான போட்டி உள்ள தொகுதிகளில் ஐக்கிய தனதா தளம் – பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமாரும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் நெருக்கடி கொடுத்து சதியில் ஈடுபடுகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“குறைந்தது 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றனர். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி வேட்பாளர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை இன்னும் வழங்கவில்லை. பாஜக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்குமாறு தலைமைச் செயலாளர் மூலம் அதிகாரிகளுக்கு முதல்வர் நிதிஷ் குமார் நெருக்கடி கொடுக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர்களின் வெற்றியைத் தடுக்க சதி நடக்கிறது” என்று தனது ட்விட்டர் பதிவில் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்