பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருகும் நீரவ் மோடியின் சகோதரி புர்வி மோடி அப்ரூவராக மாறியுள்ளார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கிற்கு தேவையான ஒத்துழைப்பு உதவியும் வழங்குவதாக புர்வி மோடி மற்றும் அவரது கணவர் உறுதியளித்திருப்பதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் கடனாக பெற்று, அதனை திரும்பி செலுத்தாமல் லண்டன் தப்பி சென்றவர் நீரவ் மோடி. இதற்காக லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் அமலாக்கத்துறையினர் தீவரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மோசடியில் நீரவ் மோடியின் சகோதரி புர்வி மோடி மற்றும் அவரது கணவர் மயங்க் மேத்தாவிற்கும் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டியிருந்த அமலாக்கத்துறையினர், கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த வழக்கில் அப்ரூவராக மாறி உண்மைகளை கூறவிரும்புவதாகவும் புர்வி மோடி தெரிவித்தார்.
இருவரும் அப்ரூவராக மாறி உண்மையை கூறுவதற்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24 ஆம் தேதி புர்வி மோடி, “என்னுடையை அனுமதி இல்லாமல் என்னுடைய பெயரில் லண்டன் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இது எனக்குச் சொந்தமானது அல்ல. அந்த கணக்கில் இருந்து 23,16,889 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 17.25 கோடி) தொகைக்கு ஒன்றிய அரசு கணக்கிற்கு மாற்றியுள்ளேன்” என விளக்கமளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும், தகவல்களையும் புர்வி மோடியும் அவரது கணவரும் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.