அண்மையில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களை குறிவைத்து தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையைப் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.
கடந்த சில நாட்களில் ஸ்ரீநகர் மற்றும் டெல்லியில் குறைந்தபட்சம் ஒன்பது இடங்களில் என்ஐஏ சோதனைகளை நடத்தியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறி இந்த விசாரணைகள் நடைபெற்றன.
சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நலத்திட்டங்களை வழங்குவதாகக் கூறி நிதி சேகரிக்கின்றன. ஆனால், பணத்தைப் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிக்க பயன்படுத்துகின்றன எனும் ‘நம்பகமான தகவல்களின்’ அடிப்படையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
“இந்த நிதிகள் ஹவாலா மற்றும் தபால் போன்ற பல்வேறு வழிகளில் ஜம்மு காஷ்மீர்-க்கு அனுப்பப்படுகின்றன. அவை ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன” என்றும் என்ஐஏவின் அறிக்கை தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற மனித உரிமைப் பாதுகாவலர் குர்ராம் பர்வேஸ், காணாமல் போன நபர்களின் பெற்றோர் சங்கத்தின் (ஏபிடிபி) அலுவலகம், கிரேட்டர் காஷ்மீர் செய்தித்தாளின் அலுவலகம், ஜேகே யடீம் அறக்கட்டளை ஆகியவை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
“இந்தச் சோதனைகள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்துக் மாற்றுக் கருத்தினரை அடக்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் இப்பிராந்தியத்தில் இந்திய அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட கடுமையான தகவல்தொடர்பு இருட்டடிப்பு இருந்தபோதிலும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக இந்த சிவில் சமூகம் மற்றும் ஊடகக் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றுவதாலும் வாதிடுவதாலும் அதிகாரிகள் இவர்களைக் குறிவைக்கின்றனர்” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் பொதுச் செயலாளர் ஜுலி வெர்ஹார் கூறியுள்ளார்.
சமீபத்தில், மத்திய அரசு தங்களைக் குறிவைப்பதாகக் குற்றம் சாட்டிய அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவிலிருந்து வெளியேறி அதன் இந்திய அலுவலகங்களை மூடியது. இது நடப்பதற்கு சற்று முன்னர் காஷ்மீர் மற்றும் அங்கு மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து அந்த அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலியும் இந்தச் சோதனைகளைக் கண்டித்துள்ளார்.
“இந்தியா கடுமையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. ஆனால், உரிமைகளை மதிக்கும் விதத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அமைதியாகத் தங்கள் கருத்துகளை முன்வைக்கும் விமர்சனங்களை ஒடுக்குவதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளார்கள். வெளிப்படையான விமர்சகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எதிராகச் சர்வாதிகார தந்திரங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
“இந்திய அரசாங்கம் உலக அளவில் தலைமை வகிக்க முற்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக நாட்டின் ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்துவதன் மூலம் சர்வதேச விமர்சனங்களை ஈர்க்கிறது” என்றும் மீனாட்சி கூறியுள்ளார்.
“அரசாங்கம் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதன் மூலமும் குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அதன் போக்கை மாற்ற வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சித்ரவதைக்கு எதிரான உலக அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பான, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான ஆய்வகமும் இதனைக் கண்டித்துள்ளன.
“இந்தப் புதிய வகை துன்புறுத்தல் செயல்கள், மனித உரிமையைப் பாதுகாக்கும் குழுக்கள் மற்றும் தனிநபர்களைத் தண்டிப்பதையும் அச்சுறுத்துவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று கூறியுள்ளனர்.
ராஃப்டோ அறக்கட்டளையும் இந்தச் சோதனைகளைக் கண்டித்துள்ளது. இந்த அமைப்பு 2017-ம் ஆண்டு, ஏபிடிபி அமைப்பின் பிரவீனா அஹங்கர் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டணியின் (ஜேகேசிசிஎஸ்) பர்வேஸ் இம்ரோஸ் ஆகியோருக்கு மனித உரிமைப் பாதுகாவலர் விருதுகளை வழங்கியது. இவர்களும் சமீபத்திய சோதனைக்கு ஆளாகியுள்ளனர்.
“விதிமுறைகளைப் பாதுகாக்க உழைக்கும் குடிமக்களை இந்திய அரசாங்கம் அச்சுறுத்துவது மிகவும் கவலைக்குரியது” என்று ராஃப்டோ அறக்கட்டளையின் இயக்குனர் ஜோஸ்டீன் ஹோல் கோபெல்ட்வெட் கூறியுள்ளார்.
“என்ஐஏ அறிக்கையில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏபிடிபி மற்றும் ஜேகேசிசிஎஸ் உடன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி உள்ளோம். அவர்களின் நிலைமையைக் குறித்தும் நாங்கள் உரையாடியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அரசு வன்முறையை அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். ஜனநாயக வழிமுறை மூலம் மனித உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களின் நோக்கமாக இருந்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.