மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரம்குறித்து, விசாரணையில் ஈடுபட்ட தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவை, சமூகவிரோதக் கும்பலொன்று தாக்க முயன்றதாகவும், அப்போது அம்மாநில காவல்துறை எவ்வித உதவியும் வழங்கவில்லை என்று அக்குழு தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, கடந்த ஜூன் 21 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அருண் மிஷ்ரா, மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட உளவுத்துறை தலைவர் ராஜீவ் ஜெயின் தலைமையில் குழுவை அமைத்தார்.
இந்தக் குழு இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விசாரணையில் ஈடுபட்டபோது தாக்கப்பட்டுள்ளதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவில் இடம்பெற்றுள தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் துணைத்தலைவர் அடிப் ரஷீத், “நாங்கள் புகாரைப் பெறுவதற்கும், விசாரணையில் ஈடுபடுவதற்கும் இங்கு வந்தோம். 40 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதையும் , அதில் யாரும் வசிக்கவில்லை என்பதை பார்வையிட்டோம். அப்போது சில சமூகவிரோதிகள் எங்களைத் தாக்கினர். அப்போது அம்மாநில காவல்துறையும் கூட எங்களுக்கு உதவவில்லை. அந்தக் கும்பல் எங்களை அடிக்க முயன்றார்கள், துரத்தினார்கள். இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளிடம் தெரிவித்தோம். ஆனால் ஒருவரும் அங்கு இல்லை” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
ஆனால், இதுகுறித்து தெரிவித்துள்ள அம்மாநில காவல்துறை, குழுவிற்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜதவப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தேவப்ரதா மசும்தார், “தேசிய மனித உரிமைகள் குழு பாதுகாப்பு படையுடன் அங்கு வந்தது என்று நான் கேள்விப்பட்டேன். அங்குள்ளவர்களை தூண்ட முயற்சிக்கும் சில உள்ளூர்வாசிகளுடன் , அவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர். வாக்குவாதம் நடந்தது. உண்மையில், பாஜகவினர் தான் அப்பகுதியின் உள்ளூர் மக்களை தாக்கினர்.” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.