உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வருவது குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, ஒன்றிய நீர் சக்தி அமைச்சகம், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், ஒன்றிய நீர் சக்தி அமைச்சகத்தின் செயலாளருக்கும், நான்கு வாரங்களுக்குள் இப்புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பொது மக்களுக்கு கல்வி கற்பிப்பதிலும், எரிக்கப்படாத சடலங்கள் கங்கையில் வீசப்படுவதை தடுப்பதிலும் அரசு அதிகாரிகள் தவறிவிட்டதாக தெரிகிறது.” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நம்முடைய புனிதமான கங்கை நதியில் இறந்த உடல்களை வீசுவது என்பது ஒன்றிய நீர் சக்தி அமைச்சகத்தின் தேசிய கங்கா தூய்மை திட்டத்தின் வழிகாட்டுதல்களை மீறும் செயலாகும் என்று செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
“இந்த சடலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடையதாக இல்லாவிட்டாலும் கூட, இதுபோன்ற நடைமுறைகள் / சம்பவங்கள் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு வெட்கக்கேடானது. இது இறந்தவர்களின் மனித உரிமைகளை மீறுவதாகும்.” என்று தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.