Aran Sei

புதிய கல்விக் கொள்கை சீராய்வுக் கூட்டம் – ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்பு

டெல்லியில் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான சீராய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ வலது சாரி அமைப்புகள் பங்கேற்றுள்ளன.

புதிய கல்வி கொள்கைக்கான சீராய்வுக் கூட்ட்த்தில் ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மூத்த நிர்வாகி சுரேஷ் சோனி பங்கேற்றுள்ளார். அதேபோல் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத், வித்யா பாரதி, சிக்‌ஷா சன்ஸ்கிருதி, உத்தன் நியாஸ், பாரதிய சிக்‌ஷான் மண்டல், அகில் பாரதிய ராஷ்டிரீய ஷைக்‌ஷிக் மகாசங் ஆகிய வலது சாரி அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.

நாட்டில் கல்வி தொடர்பான கொள்கைகள், மற்றும் சிக்கல்களைக் களைவதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

மேலும், கொரோனா பெருந்தொற்றால் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம், பின்னடைவு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “பிரிட்டிஷ்காரர்கள் அமல்படுத்திய கல்வி முறையில் மாற்றம் தேவை. நமது தேசத்தின் கல்விக் கொள்கை அதன் ஆணிவேரை தொட்டுச் செல்ல வேண்டும். பாரம்பரிய கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஜூலை 29 ஆம் நாள் 2020 ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேசியக் கல்விக்கொள்கையை செயல் படுத்த ஒப்புதல் அளித்தது நினைவு கூரத்தக்கது.

source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்