Aran Sei

நீட் விலக்கு மசோதா: தமிழ்நாடு ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப அழைக்க வேண்டும் – ஜவாஹிருல்லா கோரிக்கை

நீட் விலக்கு மசோதாவைத் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளது,

“தமிழகச் சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வழிவகுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பக்கோரி, ஆளுநருக்குத் தொடர்ந்து தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில் ஆளுநர் நேற்று (பிப்ரவரி 3) நீட் விலக்கு மசோதாவைத் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு எதிரானது என்ற கருத்தை வெளிப்படுத்தி ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். அவரது முடிவு ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும்.

தமிழக மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விஷயத்தில் ஆளுநரின் இந்த முடிவு தவறான முன்னுதாரணத்தை வழங்கியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

நீட் தேர்வு மசோதா திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்படும் தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை ஒன்றிய அரசு திரும்ப அழைக்க வேண்டும்” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்