Aran Sei

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் – வேல்முருகன் அறிவிப்பு

நீட் விலக்கு மசோதாவைத் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் நேற்று (பிப்ரவரி 3) அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளது,

“மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபுறம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளும், வருணாசிரமக் கட்டுமானத்தை அமல்படுத்தும் பாசிச நடவடிக்கைகளும் தான் அரங்கேறி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை எல்லாம்.

இதனால், நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு ஒருபோதும் ரத்து செய்யாது.  பாஜகவின் ஊதுகுழலாக இருக்கும் ஆளுநரும் சரி, நீதித் துறையும் சரி,  வழக்கைக் காயப் போட்டு, மாணவர்களின் கழுத்தைக் கச்சிதமாக அறுக்கும்.

அதன் தொடர்ச்சிதான், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது.

நீட் விலக்கு கோரும் தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர்,  அத்தீர்மானத்தைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்காதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர். அவரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. அதனைத் தான் அரசியலமைப்பு சட்டமும் கூறுகிறது. கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளும் சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக, கடந்த 1999 இல், நளினியின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி,  கலைஞர் தலைமையிலான அரசு முடிவு செய்து, அப்போதைய ஆளுநரிடம் மனு அளித்தது. அதன் மீது யாரிடமும் கருத்துக் கேட்காத ஆளுநர், அம்மனுவைத் திருப்பி அனுப்பினார்.

அதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞர் தலைமையிலான அரசு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது, மாநில அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர், அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு தான் ஆளுநருக்கு உள்ளது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதே போன்று தான், பேரறிவாளன் வழக்கிலும் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவு நீட் தேர்வுக்கும் பொருந்தும்.

இந்த கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் கருத்தில் கொள்ளாத அல்லது தெரியாத ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கண்டனத்துக்குரியது. ஆளுநரின் இத்தகையை நடவடிக்கை, அவரின் அறியாமையைத் தான் வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக, ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா என்பது கூட தெரியவில்லை.

எனவே, நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுநருக்கே மீண்டும் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.  தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும் ஆளுநரைத் திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம்  கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

இதனிடையே, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி 5 அன்று, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கவுள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்