Aran Sei

மதமாற்ற தகவலைத் தர மறுப்பு – நீதிபதிமீது நடவடிக்கை வேண்டும் – குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

Image Credits: The Wire

களிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மத்தியப்பிரதேச அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், சாகர் மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. ஒரு கிறிஸ்தவ அமைப்பால் நடத்தப்படும் சிறுவர்கள் விடுதியில் ‘மத மாற்றம்’ தொடர்பான ஒரு வழக்கைப் பற்றிய தகவல்களை வழங்கத் தவறியதன் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது போன்ற வழக்கில் மத்திய அரசு தலையிடுவது மிகவும் ‘அரிது’ என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

2015-ம் ஆண்டு, ஜூன் மாதம், அவுட்லுக் பத்திரிகை ஒரு விசாரணை செய்தி அறிக்கையை வெளியிட்டது. அதில், அசாமின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 31 பழங்குடிச் சிறுமிகள் பஞ்சாப் மற்றும் குஜராத்துக்கு மூன்று ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்த அமைப்புகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இது பல சட்டங்களை மீறி நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

மூன்றே வயதான சிறுமிகள் இந்து மதத்தைத் தழுவவும், இந்தி பேசவும், தங்கள் பழக்கவழக்கங்களைக் கைவிடவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநிலக் கிளை, அதன் மத்திய ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியது. அதில், இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இருந்தபோதும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதில் தலையிடவில்லை. ஆனால், அவுட்லுக் செய்தி இதழ், அதன் ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது வலதுசாரி அமைப்புகள் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் கிரிமினல் புகார் அளித்தன. அதில் “அந்த இதழ், ஒற்றுமையின்மை, பகை உணர்வுகள், வெவ்வேறு மத, இன, மொழி, பிராந்திய குழுக்கள், சாதிகள் அல்லது சமூகங்களுக்கு இடையே வெறுப்பைப் பரப்புகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது சிறுவர்கள் விடுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் மத மாற்றத்தைப் பற்றி வலதுசாரிய இணையவழிச் செய்தித் தளமான ஸ்வராஜியா மட்டுமே செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடுதி பினா நகரில் அமைந்துள்ளது. பினா நகரத்தின் துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி, மாவட்ட மக்கள் தொகை அதிகாரி மற்றும் சாகரின் உதவி மாவட்ட நீதித்துறை அதிகாரி ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கேட்டுக்கொண்டதைப் போல் விசாரணையை நடத்தியதாகவும், வழங்குவதற்குக் கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது.

நவம்பர் 27 அன்று, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில தலைமைச் செயலாளர் இக்பால் சிங் பெயின்ஸுக்கு எழுதிய கடிதத்தில், “தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக மாவட்ட நீதிபதி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்