15 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை, 1,375 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு விற்பதற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது.
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட #jetairwaysஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு கடனில் சிக்கியது. இதனால், அந்த நிறுவனத்தின் விமானப் போக்குவரத்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் திவால் சட்டத்தின் (Insolvency and Bankruptcy Code) அடிப்படையில், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தை அணுகியது. இதுதொடர்பான விசாரணையில், பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பிற்கு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 15,000 கோடி ரூபாய் கடனை திருப்பி தர வேண்டும் என்பதை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கல்ராய் கேப்பிடல் (Kalrock Capital) என்ற நிறுவனமும், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முராரி லால் ஜலான் (Murari Lal Jalan) என்பவரும் இணைந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சுமார் 1300 கோடி ரூபாய்க்கு வாங்கிக்கொள்வதாக விருப்பம் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து, இந்த திட்டத்திற்கு தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாம் இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக பிசினஸ் ஸ்டேண்டர்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமானத்தை இயக்குவதற்கு 90 நாட்களில் அனுமதியளிக்க வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திற்கு, தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமான டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டும் 2,004 கோடி ரூபாயை அந்த நிறுவனம் திரும்ப கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது வெறும் 1,300 கோடி ரூபாக்கு அந்த நிறுவனத்தை இயக்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், விமான டிக்கெட் வாங்கியவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.