Aran Sei

திருநர்களுக்கு அனுமதி மறுத்த தேசிய மாணவர் படை : பாகுபாட்டை கடைப் பிடிக்கிறதா அரசு ? – கிரேஸ் பானு

Image Credits: Live Law

தேசிய மாணவர் படையில் (என்சிசி) திருநர் சமூகத்தினரை அனுமதிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் அந்த அமைப்பு கூறியுள்ளதாக லைவ் லா  செய்தி வெளியிட்டுள்ளது. விதிமுறைகளில் இதற்கான ஏற்பாடு எதுவும் இல்லாததால் திருநர் சமூக மக்களை இணைத்துக்கொள்ள முடியாது என்று என்சிசி தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள கொள்கையின்படி, என்சிசியின் பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் பாலினத்தோருக்கு மட்டுமே இடம் உள்ளது என்று என்சிசி தெரிவித்துள்ளது.

திருநங்கைகளுக்கு ஒரு புதிய பிரிவை உருவாக்குவது மத்திய அரசின் பொறுப்பு என்றும் அது கூறியுள்ளது.

திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ஹினா ஹனீபா எனும் திருநங்கை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் பயின்றுவரும் பல்கலைக்கழகத்தின் என்சிசி பயிற்சியில் திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனுவுக்குக் கேரள படைப்பிரிவு அதிகாரி பிரேம் சந்த் ஜா பதில் அளித்துள்ளார்.

அதில், “என்சிசியில் உருவாக்கப்பட்ட பிரிவுகள் ஆண் மற்றும் பெண் பாலினங்களுக்கு மட்டுமே. மேலும், என்சிசியில், இரு பாலினத்தவருக்கும் வழங்கப்படும் உபகரணங்கள், பயிற்சி மற்றும் பிற பாடத்திட்டங்கள் வேறுபட்டவை” என்று அவர் கூறியுள்ளார்.

“உண்மையில், மாற்றுப் பாலினத்திற்கு ஒரு புதிய பிரிவை அமைப்பதற்கு முன், அவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வசதிகளை குறித்து மத்திய அரசு மறுஆய்வு செய்யவேண்டியிருக்கும். இந்த ஏற்பாடுகளின்றி மாற்றுப் பாலினத்தவரை சேர்ப்பது எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும். இவர்களை என்சிசியில் இணைத்துக்கொள்வது கொள்கை முடிவு சார்ந்த பிரச்னை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரண்செய் யிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர் கிரேஸ் பானு ” வெளிப்படையான பாகுபாட்டை கடைப் பிடிக்கிறது மத்திய அரசின் கீழ் இயங்கும் என்சிசி. கேரள அரசு திருநர்களுக்காக இடஒதுக்கீடு உள்ளிட்ட நல்ல திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.ஆனால், இம்மாதிரியான பிரச்சனைகளில் மாநில அரசு தலையிட வேண்டும். சமூகத்தின் அடிப்படை உரிமைகள் திருநர்களுக்கு பொருந்துமென்று உச்சநீதி மன்றம் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் தீர்பளித்து உறுதி செய்தது. என்சிசி யின் இந்த செயல்பாடு உச்சநீதி மன்றத்திற்கு எதிரானது” என்று தெரிவித்தார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்