Aran Sei

தமிழக ரப்பர் தொழிலாளர்கள் குறித்த நாவல் – தடை விதித்த மலேசிய அரசு

எழுத்தாளர் ம. நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ எனும் நாவலையும், நிஜியோ பூன் லின் எழுதிய ஃகே இஸ் ஓகே – எ கிறிஸ்டின் ப்ரொஸ்பெக்ட்டிவ்  ( Gay Is OK!: A Christian Perspective)  என்ற நூலையும் மலேசிய அரசு தடை செய்துள்ளது.

அரசுக்கு எதிரான கருத்துக்கள் அல்லது மக்கள் மனம் புண்படுகிற கருத்துக்கள் உள்ளதென்று புத்தகங்களைத் தடைசெய்வது வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் சுப்ரமணிய பாரதி எழுதிய ‘ ஆறில் ஒரு பங்கு ‘ நூலை பிரிட்டீஷ் அரசு தடை செய்தது . பாரதிதாசன் எழுதிய ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்ற நூலும், அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை, ‘கம்ப ரசம்’, ‘தந்தை பெரியாரின் பொன்மொழிகள்’, ‘புலவர் குழந்தையின் இராவண காவியம்’ நூல்களும் தடைசெய்யப்பட்டன. மதுரை வீரனின் உண்மை வரலாறு என்று குழந்தை ராயப்பன் எழுதிய நூலும் 2013-ல் தடைசெய்யப்பட்டது. கே.செந்தில் மள்ளர் என்பவரால் எழுதப்பட்ட ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ எனும் நூல் 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.

`தடையால் புத்தக வாசிப்பைத் தடுக்க முடியாது’ – அருந்ததி ராய்

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய  ‘மாதொருபாகன்’ நூலும் தடை செய்யப்பட்டு, நீதிமன்ற தலையீட்டால் அத்தடை நீக்கப்பட்டது. ‘பாலச்சந்திரன் என்றபெயரும் எனக்குண்டு’ என்கிற நூலை எழுதியதற்காக எழுத்தாளர் புலியூர் முருகேசன் தாக்கப்பட்டார்.  அண்மையில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ” தோழர்களோடு நடைபயணம்’ எனும் நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப்  பாட திட்டத்தில் இருந்து நீக்க கோரி   ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான   ஏபிவிபி பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுத்ததை அறிவோம்

இதே போன்று மலேசியாவிலும் நூல்கள் தடைசெய்யப் பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட நூலின் வெளியீடுகளை நாட்டில் அச்சிடுவது, இறக்குமதி செய்வது, உற்பத்தி செய்வது, வெளியிடுவது, விற்பனை செய்வது, வினியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்நூல்கள் பொது ஒழுக்கம் மற்றும் பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கொண்டிருக்கின்றன என்று மலேசிய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நூல்களை அரசு தடை விதிப்பது குறித்து ‘ பேட்டை’ நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா விடம் அரண்செய் பேசியபோது, “ஒரு எழுத்தாளரின் படைப்பைத் தடைசெய்வதென்பது பாசிச சமூகத்தைக் கட்டமைக்க மட்டுமே உதவும்” என்று கூறினார்.

`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்

மேலும், ”மலேசிய ரப்பர் தோட்டத்தில் தன் இருப்பைப் பற்றிக் கொண்டிருக்கும் தமிழர்களைப் பற்றிய இந்நாவல். அவர்களின் பாடுகளை கூறியதை விடவும், அம்மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், அவ்வூரின் நிலப்பரப்பு போன்றவற்றை தோய்த்தெடுத்து எழுதப்பட்டிருக்கிறது. பேய்ச்சி அம்மனின் ஆங்காரத்தின் நெடி நாவல் முழுக்க வீசிக் கொண்டே இருக்கிறது. பகுத்தறியும் குணமும், அறிவியலும்தான் தர்க்கரீதியாக இவ்வுலகின் இயங்கியல் விதிகளாக இருப்பினும், மக்களின் மனமென்பது சாமி, பலி, பாவம், கடவுளின் உக்கிரம், பரிகாரம் என தொன்மங்களில் தஞ்சமடைந்து இளைப்பாறவே விரும்புகிறது. அந்த இளைப்பாறுதலின் இலக்கிய வடிவமாகத்தான் இந்நாவலைப் பார்க்கிறேன்” என்று கூறினார்.

மேலும், ”ஒரு பறவை மோதி பெரிய விமானம் விபத்துக்குள்ளாவது போல் சமூகத்தின் புறவய சூழல் தாக்கும்போது எழுத்தாளர் தன்னுடைய படைப்பை எழுதுகிறார். சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளின் மேல் தன்னுடைய இடையீடுகளைச் செய்கிறார். ஆனால்,  புனைவின், எழுத்தின் உட்கரு சமூகத்தில் இருந்து பெறப்படுவதுதான். மண்டோவின் எழுத்துக்களில் சமூகம் பேச முடியாத நிஜத்தின் பிடியில் சிக்கிக் கொண்ட மனிதர்களைப்  பற்றி கதைகள் இருக்கும். கதைகளை விட கதைகளை உற்பத்தி செய்யும் சமூகத்தை மாற்றுவதே நம்முடைய வேலையாக இருக்க வேண்டும்”என்று தெரிவித்த அவர். நூல்களைத் தடை செய்தற்கு தன்னுடைய கண்டனங்களைப் பதிவு செய்து கொள்வதாகவும் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா தெரிவித்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்