Aran Sei

‘நவரசா!’ – நவீன கால பரத முனியாக அவதரித்திருக்கும் மணிரத்னம்!

மிழ் சினிமாவும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படங்களும் இதுவரை சரியாக அமைந்ததேயில்லை. ஹலிதா ஷமீம் இயக்கிய ‘சில்லுக் கருப்பட்டி’ இதில் விதிவிலக்கு. வழக்கமாக வரவேற்பு பெறாத ஆந்தாலஜி திரைப்படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது ‘நவரசா’. இந்திய அளவில் கொண்டாடப்படும் இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில், கடந்த தசாப்தங்களைக் கலக்கிய முக்கிய கலைஞர்கள் இந்தக் குறும்படங்கள் வழியாகச் சேர்ந்திருக்கிறார்கள். இதன் மூலமாக வரும் வருமானம் கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட திரைப்படத் தொழிற் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்படுவது பாராட்டத்தக்கது. நெட்ஃப்ளிக்ஸ் தளம் இதற்காக மிகப்பெரிய விளம்பரங்களைச் செய்தது. கையடக்க ஸ்மார்ட்போன் விளம்பரங்கள் முதல் உலகின் மிக உயரமான துபாய் புர்ஜ் கலீஃபா வரை ‘நவரசா’ மீது மக்களைத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டது நெட்ஃப்ளிக்ஸ். ஏறத்தாழ 5 மணி நேரம் கால அளவில், 9 குறும்படங்களாக வெளியானது ‘நவரசா’.

‘நவரசா’ குறித்த அறிமுகத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளம், இதனைத் தமிழ்த் திரையுலகின் கலாச்சாரப் பெருமை என்று குறிப்பிட்டிருக்கிறது. எனினும், ‘நவரசா’ என்பது அடிப்படையில் சமஸ்கிருதச் சொல். கி.மு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பரத முனி என்னும் சமஸ்கிருதத் தத்துவவாதி, நடிப்பு, ஆடல் முதலான கலைகள் குறித்த சமஸ்கிருத வேதக் கலாச்சாரப் பார்வையின் அடிப்படையில் எழுதிய நூல், ‘நாட்டிய சாஸ்திரம்’. இதில் ’ரசம்’ என்ற தலைப்பில் எட்டு ரசங்களைக் குறிப்பிடுகிறார் பரத முனி. மேலும், காலப்போக்கில் இன்னும் ரசங்களை அதனோடு இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். சமஸ்கிருதப் பண்பாட்டின் கடைசி தத்துவவாதி பரத முனி என்று 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் ஜகந்நாதப் பண்டிதர் கூறுகிறார். தமிழ்த் திரையுலகின் கலாச்சாரப் பெருமை என்ற விளக்கத்தோடு வெளியாகியிருக்கும் ‘நவரசா’ படத்தை இதில் இருந்து அணுக வேண்டியிருக்கிறது.

நன்றி : News Minute

இந்தியத் தத்துவங்கள் குறித்த கல்வியில் எப்போதும் சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்துவதும், அதன் தொன்மம் பிற மொழிகளின் முதுகில் ஏற்றிவிடப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழும் பணி. அதன் தொடர்ச்சியில் உருவாகியிருக்கிறது ‘நவரசா’. இந்திய அளவில் தன்னைத் தேசியவாதியாக அடையாளப்படுத்தி நிற்கும் இயக்குநர் மணிரத்னம் இதனைத் தயாரித்திருக்கிறார். ஒவ்வொரு குறும்படத்திற்கும் சமஸ்கிருதத் தலைப்பும் வைக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மணிரத்னம் தனது வழக்கமான பாணியிலான ‘தமிழ் மொழியில் ஓர் இந்திய சினிமா’ என்பதை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார்.

நடிப்பு, ரசங்கள் முதலான பொதுப்புள்ளியை மையமாகக் கொண்டு இயக்கப்பட்டிருப்பதாக ‘நவரசா’ மேலோட்டமாகப் பார்க்கப்பட்டாலும், அது மேலிருந்து கீழே பார்க்கும் பார்வையையும், பிற்போக்கான விவகாரங்களையும் கலை என்ற பெயரில் சந்தைப் பொருளாக்குகிறது. வர்ணத்தாலும், வர்க்கத்தாலும் உயர்ந்தவர்களின் கதைகள், அரசு அதிகாரத்தைக் கையிலேந்தியவர்களின் உணர்வுகள் முதலானவையே ‘நவரசா’வில் பேசப்பட்டிருக்கின்றன. ‘விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு!’ என்று தமிழ் சினிமாவின் பாணி வேறொரு தடத்தில் பயணித்துக் கொண்டிருக்க, மீண்டும் பழைய கதாகலாட்சேபங்களைக் கலையின் பெயராலும், பண்பாட்டுப் பெருமையின் பெயராலும் மீட்டுருவாக்கம் செய்திருக்கின்றனர் இயக்குநர்கள் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சபகேசனும். ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், ஓடிடி தளங்கள் பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையில் பாலமாக விளங்குவதாகக் கூறியிருக்கும் இருவரும், ‘நவரசா’வில் முன்வைத்திருக்கும் கலாச்சாரம் பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திற்கு அன்னியமானது.

’கருணை’ என்ற அடிப்படையில் உருவாகியிருக்கும் முதல் கதையில் கருணையை வெளிப்படுத்தும் பாத்திரமாக உருவாக்கப்பட்டிருப்பது ஓர் பார்ப்பனப் பெண். தன் அண்ணனின் தற்கொலைக்குக் காரணமானவனைக் கோபத்தில் கொல்கிறார் விஜய் சேதுபதி. கொலையைச் செய்து தலைமறைவாக இருப்பவனைக் குற்றவுணர்வு ஆட்கொள்ள, இறந்தவனின் மனைவி ரேவதியிடம் மன்னிப்பு கோரச் செல்கிறான். மேற்கு மாம்பலத்தில் வாழும் வைதிகப் பெண் ரேவதி, தன் கணவன் மீது தனக்குக் கோபம் இருந்ததால், அவனது மரணத்திற்குத் தான் பொறுப்பேற்றுக் கொள்கிறாள். தற்கொலையைக் கருணையோடு கடக்காத பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்தவனுக்கு, தனது விதவைக் கோலத்திலும் கருணையை வெளிப்படுத்தும் பார்ப்பனப் பெண் தெய்வமாக மாறுகிறாள். மணிரத்னம் எழுதிய கதை இது.

நன்றி : Netflix

 

நாளை ஐஐடிகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் சாதிய ஒடுக்குமுறை காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களுக்கு நீதி வழங்கும் பொருட்டு, பார்ப்பன ஆசிரியர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டால், அவர்களது மனைவிகள் கருணை அடிப்படையில் நீதிமன்றங்களை மன்னிப்பார்கள் என்ற ரீதியில், பழங்கால நீதி மரபைக் கருணையின் பெயரில் முன்வைக்கிறது ‘எதிரி’.

’ஹாஸ்யம்’ என்பது நகைச்சுவையின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. சமூகத்தின் பலவீனங்களைக் கேலி செய்யும் ரசம் இது என்று நாட்டிய சாஸ்திரம் இதனைக் குறிப்பிடுகிறது. இதிலும் பார்ப்பனச் சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், பார்ப்பனரல்லாத மாணவர்களின் அட்டூழியங்களைப் பொறுத்துக் கொள்கின்றனர். முதல் தலைமுறையாகக் கல்வி பயில வரும் மாணவர்கள் மீது உருவக் கேலி நிகழ்த்துவது இதில் காமெடி என்ற பெயரில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியையான தன் மகளைப் பெண் பார்க்க வருவதால், தலைமையாசிரியர் டீக்கடைக்காரரின் மகனான தனது மாணவனைக் கூலி வேலையொன்றிற்கு நியமிக்கும் காட்சி இருக்கிறது. இறுதியில், காமெடி என்ற பெயரில் சுத்தத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கும் பார்ப்பனக் குடும்பம் மீது நாய் ஒன்று அசுத்தம் செய்துவிடுகிறது. மலக்குழியில் விழுந்த நாய் பற்றிய இந்தப் படம், பழைய எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் காமெடியையும், தற்கால ஸ்டாண்ட் அப் காமெடியையும் நினைவூட்டுகிறது. ஒய்.ஜி.மகேந்திரனும் இதில் ஐயர் வாத்தியராக நடித்திருக்கிறார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவாகியிருக்கும் ‘ப்ராஜக்ட் அக்னி’ சயின்ஸ் பிக்‌ஷன் என்ற பெயரில் பாடாய்ப்படுத்துகிறது. ‘அற்புதம்’ என்ற ரசத்தைப் பேசும் இந்தக் குறும்படம் எந்தவொரு இடத்திலும் அற்புதத்தை வழங்கவில்லை. இந்தியத் தத்துவப் பெருமையைப் பேச ஜோதிடம், அறிவியல், சுமேரியன் நாகரிகம், மாயன் காலெண்டர் என இணையத்தில் கொட்டிக் கிடக்கும் கான்ஸ்பிரஸி தியரிகளை அள்ளி வீசுகிறது கார்த்திக் நரேனின் குறும்படம். போதாக்குறைக்கு மகாபாரத அடிப்படையிலும் மற்றொரு அடக்கில் இந்தக் கதை பேசப்படுகிறது.

விஷ்ணு, விஷ்ணுவின் மனைவி லக்‌ஷ்மி, குழந்தை ரிஷி, நண்பன் கிருஷ்ணா, தன்னிடம் இருந்து தனது கண்டுபிடிப்பைத் திருடிச் செல்லும் கல்கி என்று பெயர்களின் வழியாக மற்றொரு குறியீட்டைக் கார்த்திக் நரேன் இதில் வைத்து, இந்தியத் தத்துவப் பெருமையைப் பறைசாற்றியிருக்கிறார். கல்கி மற்றொரு உலகத்தைப் படைக்கச் செல்வதாக முடிவடைகிறது இந்தக் கதை.

’அருவெறுப்பு’ குறித்த கதை, அறுபதுகளில் கும்பகோணம் போன்ற பார்ப்பனர்கள் அதிகம் வாழ்ந்த அக்ரஹாரங்களில் நிகழும் திருமண வைபவம் ஒன்றை ஆவணப்படுத்தும் முயற்சியாகவே தெரிகிறது. தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்தக் கதையில், காட்சிகளின் வழியாக அறுவெறுப்பு என்ற அம்சம் வெளிப்படவேயில்லை. அண்ணன் மகனின் மகள் திருமணத்தில் குரோதம் கொண்ட சித்தப்பா பாயாசப் பாத்திரத்தை எட்டி உதைத்துக் கொட்டுவதால், அவர் மீது அறுவெறுப்பு வருகிறதாம். இதனை ‘ஹாஸ்யம்’ என்றும், ‘ஹாஸ்யம்’ குறும்படத்தை அருவெறுப்பு என்பதிலும் மாற்றம் செய்திருக்கலாம். மறைந்த மூத்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்து, பல்வேறு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய வசந்த் இந்தப் படத்தை இயக்கி, கலாச்சார சேவை செய்திருக்கிறார்.

ஈழம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பல அபத்தமான குறும்படங்களின் வரிசையில் ‘Peace’ குறும்படத்தை வைக்கலாம். போர்க்களத்தில் சிக்கிய நாய்க்குட்டியைக் காக்க முயலும் சிறுவன், சிக்கிக் கொண்டிருப்பது நாய்க் குட்டி என்றே தெரியாமல் மாட்டிக் கொள்ளும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளி என போர்க்களத்தின் கதையைப் பதிவுசெய்திருக்கிறது இந்தக் குறும்படம். இதில் தெரிந்தோ, தெரியாமலோ சிங்கள ராணுவம் விலங்குகளைக் கொல்லாது என்ற ரீதியில் கதையின் மையம் குடிக்கொண்டிருக்கிறது.

நன்றி : Netflix

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்திய சிங்கள அரசு நாய்க்குட்டி மீது கரிசனம் கொண்டிருப்பது போலவும், விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளி உணர்ச்சிவசப்பட்டு நன்றி கூற முயன்று, தற்காப்புக்காக முதல் குண்டு அவனைத் துளைத்தது போலவும் இந்தக் கதை முடிவடைந்திருக்கிறது. போர்க்களங்களையும், அமைதியையும் குறித்த எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. எனினும், எந்தப் படமும் இதுபோல தமிழ் உணர்வை ஒருபக்கம் தூண்டி, மறுபக்கம் போராளிகளைக் காமெடி செய்தது இல்லை.

’ரௌத்திரம்’ என்ற குறும்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் அரவிந்த் ஸ்வாமி. கதை நிகழும் காலகட்டம் குறித்த அறிவிப்புகளோ, காவல்துறை அதிகாரி ரித்விகா எதிர்கொள்ளும் பிரச்னை என்னவென்பது குறித்தோ எந்த உணர்வும் இல்லாத குறும்படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. அம்மாவின் கற்பு குறித்தும், தனக்கு அவப்பெயர் உருவாகும் என்ற கோபமும் இந்தப் படத்தின் மையக்கருவாக இருக்கிறது. பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் நிகழ்வதை, பாதிக்கப்படும் பெண்கள் தரப்பில் இருந்து சொல்லாமல், கற்பொழுக்கத்தின் மீது உருவான களங்கத்தை அழிக்கும் முயற்சியாக இந்தப் படம் எழுதப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் பல குறும்படங்கள், பாலியல் விவகாரங்கள் வழியாக அதிர்ச்சி மதிப்பீடு ஒன்றை உருவாக்கி, அதிலிருந்து ஒரு முடிவைப் பதிவுசெய்வார்கள். இந்த இளைஞர்களின் வரிசையில், நீண்ட கால சினிமா அனுபவம் கொண்ட அரவிந்த் ஸ்வாமியும் இடம்பெறுகிறார்.

நாட்டிய சாஸ்திரம் குரோதத்தின் அடிப்படையில் உருவாகும் கோபத்தை ‘ரௌத்திரம்’ என்றும், பற்று, உற்சாகம் முதலானவற்றின் அடிப்படையில் எழும் கோபத்தை ‘வீரம்’ என்று பிரித்துக் கூறுகிறது. ரௌத்திரம் எதிர்மறையானது; வீரம் நேர்மறையானது. ‘வீரம்’ என்ற தலைப்பில், அதர்வா, கிஷோர், அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தக் குறும்படத்தின் கதையை மணிரத்னம் எழுதியிருக்கிறார். ‘லக்‌ஷ்மி’,’மா’ முதலான குறும்படங்களையும், ‘ஐரா’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன் இதனை இயக்கியுள்ளார். ராணுவ வீரனுக்கும், காயம்பட்ட நக்சல் போராளிக்கும் இடையிலான பயணமும், உரையாடலும் இதன் சாரம் என்ற போதும், ‘ராவணன்’ படத்தின் சாயல் இதில் தென்பட்டது. போராளித் தலைவனுக்காகக் காத்திருக்கும் மக்கள், அவனைத் தேடிச் சொல்லும் வீரனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அவன் மனைவி என இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கானோர் காணாமல் செய்யப்பட்டிருக்க, காணாமல் போன ராணுவ வீரனான தன் கணவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மனைவி என்று மணிரத்னம் கதை எழுதியிருப்பது மிகப்பெரிய முரண். நக்சல் போராளிக் குழுத் தலைவரின் பெயரே ‘காம்ரேட்’ என்று சூட்டப்பட்டிருப்பது மணிரத்னத்தின் நக்சல்கள் குறித்த புரிதலைக் குறிக்கிறது.

’அச்சம்’ என்பதை ’நாட்டிய சாஸ்திரம்’ பேய்கள், அமானுஷ்யம் முதலானவற்றோடு உருவாவதாக முன்வைக்கிறது. இதில் ஜின்கள் குறித்த கதை போல, அச்சத்தை உருவாக்கிவிட்டு, பின்னர் பகுத்தறிவின் நியாயங்களுக்காக இந்தக் கதையின் முடிவின் பழிவாங்கல் கதையாக மாற்றப்படுகிறது. அதிராமப்பட்டினம், கீழக்கரை, முத்துப்பேட்டை என முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிகழும் இந்தக் கதையில் வரும் முஸ்லிம்கள் அனைவரும் பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள். ’நவரசா’ எலைட் மனிதர்களின் கதை என்பதால் இந்தச் சித்தரிப்புகள் நிகழ்ந்திருக்கலாம்.

பெர்ஸிய அரசரின் அரண்மனையின் இருக்கும் பொருள்கள் கடந்த காலத்தில் காட்டப்படும் முஸ்லிம் வீட்டிலும், துபாய் மன்னரின் அரண்மனையின் இருக்கும் பொருள்கள் நிகழ்காலத்தில் வாழும் பார்வதியின் வீட்டிலும் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு இளம்பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதான சித்தரிப்பு, நான்கு தங்கைகள் என்னும் ‘பாரத்தைச்’ சுமக்க படிப்பைப் பாதியில் விட்ட இளைஞன் எனப் பிரச்னைக்குரிய அம்சங்கள் இதிலும் இடம்பெறுகின்றன. ராகவா லாரன்ஸ் படங்களில் வரும் முஸ்லிம் பேயோட்டியைப் போல, இதிலும் ஒருவர் வருகிறார். இஸ்லாத்தின் அடிப்படை விவகாரங்களிலும் எந்த ஆய்வுமில்லாமல், அவரது கதாபாத்திரமும், அவர் செய்யும் மாந்த்ரீகப் பணியும் செய்யப்பட்டிருக்கிறது. அதிராமப்பட்டினத்தில் இருந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சென்று இஸ்லாமியக் கலைகள் என்ற பட்டப்படிப்பைக் கற்ற நடுத்தரக் குடும்பத்துத் தமிழ் இளைஞனை இந்தப் படத்தின் இயக்குநர் நமக்கு காட்டினால், தமிழ் முஸ்லிம் சமூகம் அவரைப் பயன்படுத்திக் கொள்ளும்.

கௌதம் மேனன் இயக்கிய ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ படம் பல இடங்களில் அவரது முந்தைய படங்களை நினைவூட்டினாலும், ‘காதல்’ என்ற ரசத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கைகூடாத காதல் கதைகளுக்கு கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் என்பதை நம்பி, மீண்டும் மீண்டும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ சாயலில் காதலியைப் பிரிந்த ஏக்கத்தில் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் கலைஞன் என்ற  கதாபாத்திரத்தை மீண்டும் கௌதம் மேனன் இயக்கியிருக்கிறார். கௌதம் மேனனின் வழக்கமான ‘மிடில் க்ளாஸ்’ குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும், இளம்பெண்ணும் நிகழும் காதல் கதையாக இருக்கிறது. இசையைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் இந்தக் கதையில் அழுத்தமான இசையில்லாததால், இதுவும் கரைந்து போகிறது.

நன்றி : Netflix

பரத முனியின் கலைப் பெருமையைத் தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமையாக உருவாக்கியிருக்கும் ‘நவரசா’ குழுவினர், இந்தக் குறும்படங்களின் கதையம்சங்களாலும், இயக்குநர்களின் சமூகப் பின்னணியாலும் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளில் இருந்து தொலைவில் நிற்கின்றன. ’நவரசா’ தொகுப்பில் எதுவுமே பிடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டால், அதன் ஓப்பனிங் கிரெடிட்ஸ் காட்சியைத் தாராளமாகப் பாராட்டலாம். மொத்த படங்களிலும் காட்டாத உணர்ச்சிகளை நடிகர்கள் அந்தக் கிரெடிட்ஸ் காட்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இயக்குநர் பரத் பாலா இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவை மட்டும் மற்ற குறும்படங்களை விட ஈர்ப்பைத் தருகின்றன.

– ர.முகமது இல்யாஸ்

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொடர்புடைய பதிவுகள்:

‘இது நம்ம காலம்’ – ‘சார்பட்டா பரம்பரை’ பேசும் அரசியல் என்ன?

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

அறிவின் “எஞ்சாயி எஞ்சாமி” – வேர்களை கண்டுபிடிப்பதற்கும் சமத்துவத்தைக் கொண்டாடுவதற்குமான ஒரு பயணம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்