ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, ஸ்ரீ ஜகந்நாத் கோயிலின் 100 மீட்டர் சுற்றளவில் எந்தவொரு கட்டுமானத்தையும் தடைசெய்யும் முடிவுக்கு, ஒடிசா அரசு, ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி, கோயில் நிர்வாகம், பாஜக ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் உறுப்பு அமைப்பான தேசிய நினைவச்சின்ன ஆணையம் (என்.எம்.ஏ), முதன்முறையாகப் பூரி ஜகநாதர் கோயில் வரைவு ஒன்றை, ஜனவரி 18 ஆம் தேதி தனது இணையதளத்தில் வெளியிட்டத்து. அந்த வரைவின் படி, பண்டைய நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் மற்றும் எச்சங்கள் (திருத்தம் மற்றும் சரிபார்ப்பு) சட்டம் 2010 -ன் கீழ், கோயிலைச் சுற்றியுள்ள 100 மீட்டர் பகுதியில் எந்த வித கட்டுமானங்களும் மேற்கொள்ளத் தடை விதித்து ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என்றும், 200 மீட்டர்வரை பரப்பளவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள, என்.எம்.ஏவின் அனுமதி கட்டாயமாகும் வகையில், ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு ஆட்சேபணை தெரிவிக்க, ஒரு மாதம் (பிப்ரவரி 18) அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த வரைவு, நவீன் பட்நாயக்கின் அரசாங்கம் மற்றும் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருப்பதாகவும் இந்த வரைவு, ஜகநாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறது என பாஜக குற்றம் சாட்டியிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
”கடவுள், மக்கள் மற்றும் சேவையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக”, இந்த வரைவு அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு, ஜகநாதர் கோயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் கிரிஷன் குமார், என்.எம்.ஏவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காசிபுரா சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், ஆளும் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான பத்ரி நாராயணன் பத்ரா, “இது போன்ற அவதூறு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு அனைத்து தரப்பினருடனும் ஏன் கலந்துரையாடல் நடத்தப்படவில்லை என்று நான் மத்திய அரசிடம் கேட்க விரும்புகிறேன். இது ஒடிசாவின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் முயற்சி. #Insult2Jagannath#ConspiracyAgainstOdias @InMinOfCultureGOI” என பதிவிட்டுள்ளார்.
I would like to ask the Centre that why there was no discussion held with all the stakeholders before the issuance of such blasphemous notification. This is an attempt to disrupt the peace and harmony of Odisha. #Insult2Jagannath #ConspiracyAgainstOdias @MinOfCultureGOI
— Badri Narayan Patra (M.L.A., Ghasipura) Official (@Bpatraghasipura) February 7, 2021
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த விஷயம் குறித்து, மத்திய கலாச்சார அமைச்சர் பிரஹல்லாத் சிங்கிடம் பேசியதாகவும், அவர், “ஜகந்நாத் கோயிலின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என தனக்கு உறுதியளித்தாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.