Aran Sei

நடராஜன் : புழுதியிலிருந்து எழுந்த `தமிழ்’ யார்க்கர் வீரன் – பா.பிரேம்

இது ஒரு வரலாற்றுச் சம்பவம். பின்னே, நடராஜன்கள் பிசிசிஐ அணிக்காக ஆடுவது என்பதெல்லாம் சாத்தியமா என்ன? நம்பவே முடியாத இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது, என்பது இப்போதும் பிரமிப்பாகவே இருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டு எப்படி பணக்கார விளையாட்டு, அதேபோல கிரிக்கெட் பயிற்சி என்பதும் பணக்காரர்களுக்கே சாத்தியமான ஒன்று. அதற்குள் போனாலும் அணித் தேர்வுக்கெல்லாம் மிகப்பெரிய அதிகார வர்க்கத்தின் லாபியைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இதையெல்லாம் மீறி வயல்காட்டில், செம்மண் புழுதியில், சரளைக்கல் மைதானத்தில் வெறுங்காலோடு சோறு தண்ணியில்லாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் கிரிக்கெட் பிளேயர்களின் பிரதிநிதியாக நடராஜன் உள்ளே போயிருக்கிறார். சாதாரண விசயமா இது?

இங்கு உலகம் அறிந்த கிரிக்கெட் ஒன்று என்றால் உலகம் அறியாத நடராஜன்களின் கிரிக்கெட் ஒன்று இருக்கிறது. அது லட்சக் கணக்கான சுயம்புகளையும், ஏகலைவன்களையும் உள்ளடக்கியது.

அவர்களுக்கு முறையான பயிற்சியும் கிடையாது, முறையான உபகரணங்களும் கிடையாது. ஆனால் அடுத்த நாளே கொண்டு போய் விட்டாலும், நன்கு பயிற்சி பெற்ற உள்ளூர்ப் போட்டி ஆடுகிற அணிக்குச் சவாலாக விளங்கக் கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.

நான் பிறந்து வளர்ந்த தஞ்சாவூர் மாவட்டம் கிரிக்கெட்டின் பல வித்தியாசமான வடிவங்களைக் கொண்டது. ஏப்ரல் இறுதியில் இருந்து ஜூன் முற்பகுதி வரைதான் அங்கு கிரிக்கெட் சீசன். மற்ற மாவட்டங்களைப் போல வார இறுதி நாட்களில் தொடங்கி, முடிக்கப்படுவது மாதிரியான போட்டிகள் நடத்தும் வழக்கம் இங்கில்லை. எல்லா கிராமங்களிலும், எல்லா நாளிலும் அந்த இரண்டு மாதம் முழுவதும் டோர்னமென்ட்டுகள் நடக்கும். முதல் ரவுண்டு 3 நாட்கள், இரண்டாம் ரவுண்டு 2 நாட்கள், மூன்றாம் ரவுண்டு 1 நாள், நான்காம் ரவுண்டு 1 நாள், அரையிறுதி, இறுதிப்போட்டிகள் 1 நாள் என ஒரு வாரம் ஆகும் ஒரு டோர்னமென்ட் முடிய. ஒரு நாளில் இரண்டு மூன்று ஊரில் ஆடிவிட்டு, அவற்றை முடிக்க மாறி மாறி அங்கும் இங்குமாகப் போய் ஆடுவதெல்லாம் மறக்கவே முடியாத அனுபவம்.

அப்படி வயல்காட்டு, செம்மண், சரளைக் கல் பிட்ச்களில் வெறுங்காலோடு ஒரு நாள் முழுக்கச் சோறு தண்ணியில்லாமல், பிசிசிஐ கனவெல்லாம் இல்லாமல் உள்ளூரிலேயே முடங்கிய சில நடராஜன்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை St.Pieter’s Ground தான் கிரிக்கெட்டின் மெக்கா. அங்கு நடக்கும் போட்டிகளில் வெல்வோரே தஞ்சாவூரின் தலைசிறந்த அணியாகக் கருத்தில் கொள்ளப்படும். அதுவரையில் திருவையாறு, தஞ்சாவூர் அணிகளே கோலோச்சிக் கொண்டிருந்த அந்த மைதானத்தில் நகர்ப்புற கிரிக்கெட் வீரர்களின் ஆதிக்கத்தை உடைத்து தடம் பதித்தது வடுவூர் அருகில் இருக்கிற குக்கிராமமான சீனிக்குடிக்காடு அணி. அதில் ராஜேஷ், சரண்ராஜ், சிலம்பு, ராமச்சந்திரன், அருண் எனப் பல திறமையான வீரர்கள் நகர்ப்புற வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார்கள். அதேபோல ஒரத்தநாடு குணா, உத்தமன், அசோக் ஆகியோரும் அசரடிக்கிற வீரர்கள்தான். இதில் அசோக் சிங்கப்பூரில் சிறந்து விளங்கும் தஞ்சை சிசி அணியின் முக்கியமான வீரராக விளங்கினார். பிசிசிஐ அணிக்கு விளையாடத் தகுதியான ஒரு பந்து வீச்சாளர்.

இவர்களில் சிலம்புவின் உலகத்தரம் வாய்ந்த பீல்டிங் தஞ்சாவூர் பீட்டர்ஸின் சரளைக் கல் கிரவுண்டில் பயங்கரமான பிரசித்தம் பெற்றது. எவ்வளவு கரடுமுரடான வயல்காடாக இருந்தாலும் பந்தை பாய்ந்து பிடிப்பதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிலம்புக்கு நிகர் சிலம்பு தான்.

அதே போல தஞ்சாவூர் அணிகளில் சிறந்த அணியான My Friends தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தங்களது முத்திரையைப் பதித்தவர்கள்தான். பிரசாந்த், பிராவோ என்கிற ஆனந்த், வீரா, அமான் என அது ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. கடந்த ஆண்டு கூட அழகப்பன் என்றொருவன் இறந்து போனான், அவனை குட்டி சச்சின் என்றே அழைப்பார்கள். அவனது இறப்புச் செய்தி தஞ்சாவூரையே கலங்கச் செய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் டோனி பாய்ஸ் கார்த்தி விக்கெட் கீப்பிங் பற்றி வியக்காத யாருமே இருக்க முடியாது. 38 வயது நிரம்பிய போதும், இப்போதும் அதே எனர்ஜியோடு அவர் அடிக்கிற டைவ்கள் மைதானத்தையே அதிர வைக்கும். அருள், காமராஜ் ஆகியோர் தலைசிறந்த டென்னிஸ் பால் பேட்ஸ்மேன்களாக விளங்கியவர்கள். அருள் இப்போது சிங்கப்பூரில் தமிழ் பிரதர்ஸ் அணிக்கும், காமராஜ் இப்போது திருப்பூர் மேக்சிமஸ் அணிக்கும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

உசிலங்குளம் கார்த்தி, மாலையீடு கார்த்தி, வடவாளம் செந்தில் வெட்டன்விடுதி கார்த்தி, ஊரணிபுரம் கார்த்தி, சேத்தியாப்பட்டு முருகேஷ் எனப் புதுக்கோட்டையின் கிரிக்கெட்டுக்கு அடையாளமாக இருக்கிறவர்கள் ஏராளமானோர். எல்லாரையும் விட மறைந்த முத்துப்பாண்டிதான் புதுக்கோட்டை கிரிக்கெட்டின் அறியப்பட்ட முகம். ரஞ்சிக்கான தமிழக அணியில் இடம்பிடித்தவர்.

கல்லல் சங்கர் காரைக்குடி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அடைந்த புகழை விட சிங்கப்பூரில் அடைந்த புகழ் அதிகம். பேராவூரணியின் சுரேந்திரன் இப்போது சிங்கப்பூர் தேசிய அணியில் விளையாடுகிறார்.

திருப்பூர் மேக்சிமஸ், சேலம் ரோஜாவனம், ஸ்கூல் பாய்ஸ் உள்ளிட்ட அணிகளில் உள்ள பிளேயர்களைப் பற்றியெல்லாம் கூற அவ்வளவு இருக்கிறது.

இதில் சேலத்தின் ஜேபி என்கிற ஜெய பிரகாஷ் ஒரு அருமையான பேட்ஸ்மேன். அந்த சுற்றுப்புர மாவட்டங்களில் அவரை அறியாதவர்களே இருக்க முடியாது என்று கூறுமளவிற்கு அவர் சிறந்த பேட்ஸ்மேன். அவர் தான் இப்போது பிசிசிஐ அணிக்கு தேர்வாகியிருக்கிற நடராஜனின் வழிகாட்டி, உறுதுணை எல்லாமே.

இவர்கள் எல்லாரும் ஓர் உதாரணத்திற்காகக் கூறப்பட்டவர்கள்தான். இவர்களைப் போல, இவர்களுக்கும் மேலான திறமையுடைவர்களாக இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு பிசிசிஐ கனவு இருக்குமென்றால் தெரியாது. ஆனால், பிசிசிஐ-க்கு இப்படி பல லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதைப் பற்றிச் சுத்தமாகத் தெரியாது.

உழைக்கும் வர்க்கமாக இருக்கிற, உடல் திறனில் இப்போதிருக்கிற வீரர்களை விடவும் மேம்பட்டவர்களாக இருக்கிற அவர்களில் சிறந்தவர்களைத் தேடிப் போகிற எந்த நோக்கமும் அதற்குக் கிடையாது. ஆனால் நடராஜன்கள் பிசிசிஐ கதவுகளைத் தாங்களே போய்த் தட்டத்தான் செய்கிறார்கள். வலியோர்க்கு மட்டுமே திறக்கிற அந்தக் கதவை உடைக்கத் தான் செய்கிறார்கள்.

உண்மையில் முதல் முறையாக ஒரு வீரனுக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி, தாங்களே அந்த வாய்ப்பைப் பெற்றுவிட்டதாக ஒவ்வோர் ஊர்க்கார கிரிக்கெட் வீரனும் மகிழ்ந்து கொண்டிருக்கிறான். நடராஜனை பிசிசிஐ ஜெர்சியில் பார்த்து, நானும் மகிழ்கிறேன், லட்சம் நடராஜன்களில் ஒருவனாய்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்