Aran Sei

‘வளர்ச்சி நிதியில் சோனியா காந்தி குடும்பத்திற்கு பங்கா? நிரூபிக்கா விட்டால் அவதூறு வழக்கு’ – அமித்ஷாவுக்கு எச்சரிக்கை

ன் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ள அமித் ஷா, அதை நிரூபிக்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்வேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

நேற்று முன் தினம் (பிப்ரவரி 28) புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது,  “பிரதமர் மோடி புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி அனுப்பினார். ஆனால், முதல்வராக இருந்த நாராயணசாமி, அதில் ஒரு பகுதியை சோனியா காந்தி குடும்பத்துக்கு அனுப்பி விட்டார்.” என்று அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 1) செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாராயணசாமி, அமித் ஷாவின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், “இது உண்மையில் எனக்கு எதிரான தீவிரமான குற்றச்சாட்டு. என் மீது அவதூறு கூறி, என் மதிப்பையும் மரியாதையையும், சோனியா காந்தி குடும்பத்தின் மாண்பையும் குலைக்கும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அமித் ஷா நிரூபிக்காவிட்டால், நான் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்வேன்.” என்று நாராயணசாமி எச்சரித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அமித் ஷா பொய்யான குற்றச்சாட்டைக் கூறியதற்கு, அவர் புதுச்சேரி மக்களிடமும், இந்த தேசத்திடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியுமா என நான் அவருக்குச் சவால் விடுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்