Aran Sei

ஸ்டெர்லைட் செயல்பட அனுமதி; தமிழகம் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

seeman11_0703chn_1.jpg

கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்யும் வகையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தன்னுடைய ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கிடையில், இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவனம் 4 மாதங்கள் ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன. தூத்துக்குடி நிலத்தையும், சூழலியலையும் பாழ்படுத்தி, சுவாசிக்கும் காற்றையே நச்சுக்காற்றாக மாற்றியதோடு மட்டுமல்லாது 14 உயிர்களின் மூச்சுக்காற்றையும் நிறுத்தக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் உயிர்காக்க சுவாசக்காற்றை உற்பத்தி செய்து தருவதாகக் கூறுவது கேலிக்கூத்தானது” என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் முதலமைச்சர்: ‘துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு’ நீதி வேண்டும் – கனி மொழி

”மத்திய அரசின் கையாலாகத்தனத்தாலும், மக்கள் நலன் குறித்த அக்கறையின்மையினாலும் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் காரணமாகக் கொண்டு மீண்டும் இயங்குவதற்கு அடித்தளமிடும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிகளை மொத்தமாய் முறியடிக்க வேண்டும். மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் முற்று முழுதாகத் தீங்கு விளைவிக்கிற, நச்சு ஆலை என்று உயர் நீதிமன்றத்தாலேயே குறிப்பிடப்பட்ட, சூழலியல் கேடுகளுக்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட கொடிய ஸ்டெர்லைட் ஆலையை எதன்பொருட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் – தமிழக அரசுக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கடிதம்

“ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கிய காலந்தொட்டு மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆட்பட்ட தூத்துக்குடி மக்கள் நாளும் அல்லல்பட்டு நின்றபோது அதனைத் துளியும் மதித்திடாது இலாபநோக்கில் சுற்றுச்சூழலைச் சீரழித்து, மக்களைத் துன்புறுத்தி கொள்ளை இலாபம் ஈட்டி வந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், இன்றைக்கு மக்கள் உயிரின் மீது பரிவு காட்டுவதாகக் கூறுவது பச்சைச்சந்தர்ப்பவாதம் என்பதைத்தாண்டி வேறில்லை” என்று சீமான் கூறியுள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

”இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாட்டில், ஒரு அவசரத் தேவைக்குச் சுவாசக்காற்றை உற்பத்தி செய்யக்கூட மாற்று வழிகளில்லையா? ஸ்டெர்லைட் ஆலையைவிட்டால் ஆக்சிஜனைக் கொண்டு வர வாய்ப்புகளே வேறு ஏதுமில்லையா? என்றும் “14 உயிர்களைப் பலிகொண்ட அந்த ஆலையை எதன்பொருட்டும் திறப்பதெனும் பேச்சுக்கே இடமில்லை என்பதுதான் மண்ணின் மக்களின் மனநிலையாக உள்ளது. அதனை உணராது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதும், கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்துவதும் தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்ப்பதாக உள்ளது” என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா நிறுவனம் – வைகோ குற்றச்சாட்டு

”தனது கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை, தூத்துக்குடியில் 14 உயிர்களைப் பறித்தபோது, ‘தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். எனக்கு எதுவும் தெரியாது’ எனக்கூறி வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக நின்ற தமிழக முதல்வர், இப்போது மறுபடியும் இத்தகைய படுபாதகச்செயலைச் செய்தால் அது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்” என்று கூறியுள்ள சீமான், ”தங்கை ஸ்னோலின் உள்ளிட்ட 14 பேரைக் கண்முன்னே துள்ளத்துடிக்கப் படுகொலை செய்திட்ட அரசுகள் இன்றைக்குத் துளியும் மனச்சான்று இல்லாது ஸ்டெர்லைட் ஆலையின் பக்கம் நிற்கத் துணிவது வன்மையான கண்டனத்திற்குரியது” என்றும் சீமான்  கூறியுள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தை விட நீதிக்குழு பாதுகாப்பானது – ரஜினியை பகடி செய்த ஸ்டெர்லைட் விசாரணை குழு ஆலோசகர்

”ஆகவே, தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது அரசின் கொள்கை முடிவென அறிவித்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கிற வேதாந்தா குழுமத்தின் முன்நகர்வுகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதற்கு மாறாக, தற்காலச் சூழலைக் காரணமாகக் காட்டி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிகள் நடக்குமேயானால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும்; தேவையற்றப் பதற்றமும், சட்டம் ஒழுங்குச் சிக்கலும் ஏற்படுமென எச்சரிக்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்